புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரையும் பணிகள் நிறைவு
மீளாய்வு செய்யப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரையும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் இடம்பெற வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய வரைவு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தீர்மான வரைவாகத் தயாரிப்பதற்காக தற்போது, சட்ட வரைவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட நான்கு நிபுணர்களின் ஆலோசனை அறிக்கைகளின் அடிப்படையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
மீளாய்வு செய்யப்பட்ட இந்த சட்ட வரைவு ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டது. அதையடுத்து, தீர்மான வரைவாகத் தயாரிப்பதற்காக கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியில், வரைவுப் பிரதி சட்ட வரைவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்னொரு பக்கத்தில் தேசிய பாதுகாப்புக்கான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவிடமும் இந்த வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வரைவை பார்வையிடுவதற்கு இவர்களும் அழைக்கப்பட்டனர்.
இந்த புதிய சட்டம் தொடர்பான நாடாளுமன்ற தீர்மான வரைவு தயாரிக்கப்பட்டதும், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும்.