முதுகெலும்புடைய தலைவர்கள் தேவை – நிலாந்தன்
கேப்பாப்பிலவில் படைத்தளத்தின் முன்பாக நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும் போர்த்தாங்கியின் நிழலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் இருவர் கடந்த வாரம்; சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கிய பொழுது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்தித்தார்கள்.
வைக்கப்பட்டிருக்கும் போர்த்தாங்கியின் நிழலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் இருவர் கடந்த வாரம்; சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கிய பொழுது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்தித்தார்கள்.
சாகும் வரையிலுமான உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போதிலும் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஓர் உயிர்தானும் இழக்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் இது தொடர்பில் தாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்றும் நாடாளுமன்றத்தில் இது பற்றி பேசுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். எனினும் நிலங்களை மீட்பது தொடர்பில் தங்களுக்குள்ள இயலாமைகளையும் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் சந்தித்ததையடுத்து சாகும் வரையிலுமான உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால் முகாம் வாசல் போராட்டம் தொடர்கிறது. இச் சந்திப்புத் தொடர்பில் சில கேள்விகள் எழுகின்றன. உண்ணாவிரதிகளுக்கு வாக்களித்தபடி மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதால் மட்டும் அரசாங்கம் அசைந்து விடுமா?
🏃ஏற்கெனவே சம்பந்தரும், சிவசக்தி ஆனந்தனும் உரையாற்றியதை விடவும் இவர்கள் கூடுதலாக எதை உரையாற்றப் போகிறார்கள்? அப்படி உரையாற்றி ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் வேறெப்படி அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள்? குறைந்தபட்சம் போராடும் மக்களோடு வந்திருந்து தாங்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்களா? அல்லது அதை விடக் குறைந்த பட்சம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் தாம் தமது பதவிகளைத் துறப்போம் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்களா?
இக் கேள்விகள் மக்கள் பிரதிநிதிகளை நோக்கி மட்டும் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. அவர்களைத் தெரிவு செய்யும் பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையை நோக்கியும் கேட்கப்படும் கேள்விகள்தான். இவை கேப்பாப்பபிலவு போராட்டத்தோடு மட்டும் தொடர்புடைய கேள்விகள் அல்ல. பெருந்தமிழ்ப்பரப்பையும், உள்ளடக்கி இந்திய உபகண்டத்தை நோக்கியும் கேட்கப்படும் கேள்விகள்தான்.
பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமைக்கூடாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தமது மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எது வரையிலும் போராடலாம்? எப்படிப் போராடலாம்? அந்தத் தலைவர்கள் போராட வேண்டிய ஒரு களத்தில் சாதாரண சனங்கள் போராடுகிறார்கள் என்றால் அந்தத் தலைவர்களுக்குரிய வேலை என்ன? தலைவர்கள் செய்யத் துணியாத காரியங்களை சாதாரண சனங்கள் செய்கிறார்கள் என்றால் தலைவர்கள் எதற்கு?
தலைவர்களுகாகக் காத்திருக்காமல் போராட முன்வரும் சாதாரண சனங்கள் தேர்தல் என்று வரும்பொழுது ஏன் மேற்படித் தலைவர்களையே தெரிவு செய்கிறார்கள்? அல்லது தாங்களே தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏன் அவர்கள் முன்வருவதில்லை? அல்லது அவர்கள் போட்டியிட முடியாதபடிக்கு பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையானது மூடப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறதா? அப்படியென்றால் போராடத் தயாராக இருக்கும் மக்களுக்கு போராடத் தயாரற்ற தலைவர்கள் எப்படித் தலைமை தாங்கலாம்?
மேற்படிக் கேள்விகளை முன்வைத்து சில வகைமாதிரி உதாரணங்களை இங்கு பார்க்கலாம்.
முதலாவது அண்மையில் தோற்கடிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த உண்ணாவிரதப் போராளியான இரோம் சர்மிலா சானு. அவர் தனது மக்களுக்காக பதினாறு ஆண்டுகள்; உண்ணாவிரதம் இருந்தார். அந்த உண்ணாவிரத்திலேயே அவருடைய இளமை கரைந்து போனது. அவர் திருமணம் செய்யவில்லை. பதினாறு ஆண்டுகளின் பின் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு தொன்ணூறு வாக்குகளே கிடைத்தன. எந்த மக்களுக்காக அவர் தன்னை ஒறுத்துப் போராடினாரோ அதே மக்கள் அவரைக் கேவலமாக தோற்கடித்தார்கள். அதே சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிறிமினலை தமது பிரதிநிதியாக தெரிந்தெடுத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் கிடைத்ததும் சர்மிலா கண் கலங்கியபடி சொன்னார். ‘நான் இனி இந்தப் பக்கம் கால் எடுத்து வைக்க மாட்டேன்’ என்று. ஒரு மகத்தான போராளி பிரதிநிதித்துவ ஜனநாயக்தின் பக்கம் இனி காலெடுத்து வைக்க மாட்டேன் என்று கூறும் அளவிற்குத்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் ஒன்றின் உள்விரிவு காணப்படுகிறதா?
சர்மிலாவின் தோல்வியிலிருந்து இந்திய ஜனநாயக முறைமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றன. இ.வெ.ரா.பெரியார் ஒரு முறை கூறினார் ‘ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதுதான் உண்மையான கருத்து. அப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கு மக்கள் அறிவாளிகளாகவும்,ஓரளவிற்காவது யோக்கியர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்’ என்று. இது சர்மிலாவைத் தோற்கடித்த அவருடைய ஜனங்களுக்குப் பொருந்துமா? அல்லது சர்மிலா போட்டியிட்ட பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையின் செழிப்பின்மைதான் அவரைத் தோற்கடித்ததா? சர்மிலாவின் தோல்வி இலட்சியவாதத்தின் தோல்வியா? அல்லது இந்திய ஜனநாயக பாரம்பரியத்தின் தோல்வியா?
சொத்துக்களைக் குவித்த நடிகைகள் பெருந்தலைவிகளாக வர முடிகிறது. ஆனால் தனது மக்களுக்காக உயிரைத் துறக்கச் சித்தமாயிருந்த ஓர் இலட்சியவாதிக்கு தொன்ணூறு வாக்குகளே கிடைத்திருக்கின்றன. இலட்சியவாதிகளையும், தியாகிகளையும் தெரிந்தெடுக்க முடியாத அளவிற்கு இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை காணப்படுகின்றதா? அல்லது வாக்கு வேட்டை அரசியலின் நெளிவு சுழிவுகளோடு தன்னைப் பொருத்திக் கொள்வதற்கு ஓர் இலட்சிய வாதியால் முடியவில்லையா? அல்லது அவருடைய இலட்சிய வாதத்தை மக்கள் மயப்படுத்த அவரால் முடியவில்லையா? இது முதலாவது உதாரணம்.
இரண்டாவது உதாரணம் தமிழகத்துப் போராட்டங்கள். அண்மையாண்டுகளாக தமிழகத்தில் இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிகளில் அரசியல் வாதிகள் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவை அரசியல்வாதிகளை நீக்கிய போராட்டங்களாக காணப்படுகின்றன. ஆனால் அரசியல் நீக்கப்பட்ட போராட்டங்கள் அல்ல. அரசியல்வாதிகளை நீக்கியது என்பதே ஓர் அரசியல்தான். இவ்வாறு அரசியல்வாதிகளை நீக்கும் மக்கள் தேர்தலின் போது யாரைத் தெரிவு செய்கிறார்கள்? அல்லது அவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரைத் தெரிவுசெய்கிறார்கள்? அவர்களால் அல்லது அவர்களுடைய குடும்பத்தவர்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை நீக்கும் ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது? தலைவர்கள் பொருத்தமில்லை என்றால் ஒரு மாற்றுத் தலைமை குறித்தே சிந்திக்க வேண்டும்.
தன்னெழுச்சிப் போராளிகள் அண்மையில் ஒரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதில் இடமில்லை என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பக்கத்து நாடாகிய சீனாவில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் இளம் தலைவர்கள் என்று அழைக்கப்படுவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிய செயற்பாட்டாளர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அரசியல்வாதிகளை நீக்குவது என்பது ஒரு இலட்சியவாதமாக இருக்கலாம். ஆனால் பொருத்தமான அரசியல்வாதிகளை அரங்கினுள் கொண்டு வரும் போதே தன்னெழுச்சிப் போராட்டங்கள் அவற்றின் உன்னதமான உச்சங்களை அடைகின்றன. இது இரண்டாவது உதாரணம்.
மூன்றாவது உதாரணம். ஓர் உள்ளூர் உதாரணம். சுன்னாகம் நீரில் எண்ணெய் கலந்திருப்பதாக ஒரு சர்ச்சை உண்டு. இது தொடர்பில் வட மாகாணசபைக்கு எதிராக போராட்டங்களும் நடந்திருக்கின்றன. அந்த நீரில் எண்ணெய் இல்லை என்று வடமாகாண சபை கூறுகின்றது. அது நியமித்த நிபுணர் குழுவும் கூறுகின்றது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வேறு விதமாக உள்ளது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சரும் நீரில் மாசு உண்டு என்று கூறுகிறார்;. சம்பந்தப்பட்ட பகுதி மக்களில் பலர் இப்பொழுதும் தமது கிணற்று நீரை குடிக்கத் தயாரில்லை. இவ்வாறு தமது கிணற்று நீரை குடிக்கத் தயங்கும் மக்கள் அதில் எண்ணெய் கலந்திருக்கவில்லை என்று கூறும் ஒரு கட்சிக்கே கடந்த பொதுத் தேர்தலின் போது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். சுன்னாகம் நீர் தொடர்பில் போராடிய ஒரு பகுதியினரின் பின்னணியில் ஒரு மருத்துவரும் இருந்தார். அவர் பின்னர்; யு.என்.பியின் வேட்பாளராக கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். மேற்படி தேர்தல் முடிவுகளை முன்வைத்து பின்வரும் கேள்விகளை எழுப்பலாம்.
1. சுன்னாகம் நீரில் எண்ணெய் கலந்திருந்தாலும் அதற்கு கூட்டமைப்பு பொறுப்பில்லை என்று வாக்காளர்கள் கருதுகிறார்களா?
2. எண்ணெய் கலந்திருந்தாலும் அதை அகற்ற கூட்டமைப்பால் முடியாது என்று மக்கள் நம்புகிறார்களா?
3. எண்ணெய் கலந்திருக்கிறதோ இல்லையோ தேர்தல் என்று வரும் பொழுது இன அடையாளத்தின்பாற்பட்டே மக்கள் சிந்திக்கிறார்களா?
4. மக்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. புத்தி பூர்வமாக யோசிக்காமல் ஒரு பழக்கத்தின் பிரகாரம் அவர்கள் வாக்களிக்கிறார்களா?
இக் கேள்விகளில் எது சரி? தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மருத்துவர் – இவர் போராட்டங்களில் ஈடுபட்டவரல்ல- சொன்னார் ‘இந்தச் சனத்திற்கு நஞ்சைக் கலந்து கொடுத்தாலும் வீட்டுக்குத்தான் வாக்களிக்கும் போல’ என்று.
சுன்னாகம் நீர் விவகாரமானது பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையின் கோறையான தன்மையைக் காட்டுகிறதா? அல்லது தமிழ் வாக்காளர்கள் தேர்தல் என்று வரும் பொழுது எப்பொழுதும் பெரும்பாலும் இனரீதியாகவே சிந்திக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறதா?
சுன்னாகம் நீர் விவகாரம் மட்டுமல்ல,தன்னெழுச்சியான போராட்டங்கள் மட்டுமல்ல நிகழ்ந்து கொண்டிருக்கும் ஜெனீவாக் கூட்டத் தொடரும் தமிழ்த் தலைவர்களின் யோக்கியதையை நிரூபித்திருக்கிறது. அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முதலில் சம்மதம் தெரிவித்த தலைவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வவுனியாவில் நடந்த கூட்டத்தில் நசிந்து கொடுத்திருக்கிறார்கள். அரசுத் தலைவர் மைத்திரியின் வார்த்தைகளில் சொன்னால் அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. அண்மையில் பலாலியில் வைத்து மைத்திரி என்ன சொன்னார்? படையினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நானொன்றும் முதுகெலும்பில்லாதவன் இல்லை என்ற தொனிப்பட அவர் உரையாற்றியுள்ளார்.
மைத்திரி ஏன் அவ்வாறு உரையாற்றினார் என்று சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு வந்த நோர்வீஜிய தூதரகத்தின் அரசியல் விவகாரத்திற்குப் பொறுப்பான அதிகாரி கேட்டிருக்கிறார். ‘நீங்கள் கொடுத்த துணிச்சல்தான் காரணம். ஐ.நாவும், மேற்கு நாடுகளும் தங்களை எதுவும் செய்யப் போவதில்லை என்று அவர்கள் நம்புவது தான் காரணம்.’ என்று ஒரு சிவில் சமூகப் பிரதிநிதி அவரிடம் கூறியிருக்கிறார்.
தோற்றத்தில் மைத்திரி சாதுவாகத் தோன்றுகிறார். மகிந்தவைப் போல தண்டு சமத்தான உடல் வாகோ முரட்டு மீசையோ அவருக்கு இல்லை. ஆனால் தனது வெற்றி நாயகர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான முதுகெலும்பு தனக்கு உண்டு என்று அவர் கூறுகின்றார். தன்னுடைய இனத்திற்கு அவர் விசுவாசமாகக் காணப்படுகின்றார். ஆனால் தமிழ்த் தலைவர்கள் அப்படியா இருக்கிறார்கள்? தமது இனத்திற்கு விசுவாசமாக முதுகெலும்போடு நிமிரும் தமிழ்த் தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? வவுனியாவில் தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்ட தலைவர்களை இதே தமிழ் மக்கள்தானே தெரிந்தெடுத்தார்கள்? ஆனால் அண்மை வாரங்களாக அந்தத் தலைவர்களுக்காக காத்திருக்காமல் முகாம்களின் வாசல்களில் போய் குந்தியிருக்கிறார்கள். இது பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையின் போதாமைகளைக் காட்டுகின்றது.
ஈழத்தமிழர்களுக்கு இப்போது தேவைப்படுவது பங்கேற்பு ஜனநாயக முறைமைதான். ஒரு பேரழிவிற்கும் பெருந் தோல்விக்கும் பின்னரான கடந்த எட்டாண்டு காலப் பகுதி எனப்படுவது தமிழ் மிதவாதத்தின் முதுகெலும்பின்மையைத்தான் நிரூபித்திருக்கிறது. பங்கேற்பு ஜனநாயக முறைமை தொடர்பில் சிந்திக்கவும்,ஆராயவும்,எழுதவும், தர்க்கிக்கவும் வேண்டிய காலம் வந்து விட்டது.
ஐ.நா கூட்டத் தொடரையொட்டி கடந்த மாதம் யாழ் நாவலர் மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பது பற்றிக் கலந்துரையாடுவதற்காக கூட்டப்பட்ட அக் கூட்டத்தல் மிகக் குறைந்தளவு மக்களே பங்குபற்றினார்கள். அதில் தொடக்கத்தில் ஒரு மூத்த சட்டத்தரணி உரையாற்றினார். தமிழரசுக்கட்சியின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவரான அவர் சொன்னார் ‘இக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நான் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தேன். ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே வந்திருக்கிறார்கள். இப்படித்தான் சுமாராக அறுபது ஆண்டுகளுக்கு முன்னரும் சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்காக நான் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருக்கிறேன்’ என்று.
ஒரு மூத்த சத்தியாக்கிரகியின் கூற்று இது. அறுபது ஆண்டுகளின் பின்னரும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் ஒரு நிலைக்குத்தான் கடந்த எட்டாண்டுகால அரசியல் ஒரு மூத்த சத்தியாக்கிரகியை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இத்தருணத்திலாவது பங்கேற்பு ஜனநாயகத்தை குறித்து தேவையான ஆராய்ச்சிகளைச் செய்யவும் ஈழத் தமிழர்களுக்கேயான புத்தாக்கம் மிக்க செயற்பாட்டு அரசியல் வடிவங்களை கண்டு பிடிப்பதற்கும் தமிழ் மக்கள் முன்வர வேண்டும். இல்லையென்றால்; அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடியும் போது 2019ம் ஆண்டிலும் யாரும் மூத்த சத்தியாக்கிரகி ஒருவர் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்து ஒரு முப்பது பேரைக் கூட்டி கூட்டம் நடத்தும் நிலைமைதான் தொடர்ந்துமிருக்கும்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்