Breaking News

கச்சதீவு திருவிழா ஆரம்பம் : இந்திய யாத்திரிகர்கள் பகிஷ்கரிப்பு

இலங்கை யாத்திரிகர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது.


தமிழக மீனவர் ஒருவர் ஸ்ரீலங்கா கடற்படையினரின் தாக்குதலில் பலியானதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இம்முறை திருவிழாவை தமிழக யாத்திரிகர்கள் புறக்கணித்திருந்தனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

புதிததாக நிர்மாணிக்கப்பட்ட தேவாயலத்தில் முதல்முறையாக இம்முறை இம்முறை திருவிழா நடைபெற்றிருந்தது.

யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கலாநிதி பத்தினாதர் யோசவ்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பாண்ட் வாத்தியங்கள் சகிதம் அருட்தந்தை கலாநிதி பத்தினாதர் யோசவ்தாஸ் ஜெபரட்ணம் அழைத்துச் செல்லப்பட்டார்.

இலங்கையின் குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகுகள் மூலம் சென்ற ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை யாத்திரிகள் கச்சதீவுத் திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா தளபதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஏனைய கடற்படை அதிகாரிகளும் இம்முறை திருவிழாவில் பங்கெடுத்திருந்தனர்.

இந்த திருவிழாவில் பங்கேற்ற யாத்திரிகள் தமது மன்றாட்டங்களை புனித அந்தோனியாரிடம் இரந்து வேண்டிநின்றனர்.

கடந்த வாரம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்துகொள்ளவதை புறக்கணித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்திய யாத்திரிகர்கள் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசி கொலன்னே தெரிவித்துள்ளார்.

இம்முறை இராமேஸ்வரத்தில் இருந்து 2000 பேர் உள்ளடங்கலாக இந்தியாவில் இருந்து  5015 ஆயிரம் பக்தர்கள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளவதற்கென பதிவுசெய்திருந்தனர்.

எவ்வாறாயினும் இந்திய மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்துகொள்ள போவதில்லை என இந்த மீனவர் சங்கங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.