சிறிலங்கா படைகள் தொடர்ந்தும் விலக்களிப்புடன் செயற்படுகின்றன – யஸ்மின் சூகா
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்ட போதிலும், சிறிலங்கா படையினர் விலக்களிப்புடன் தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘போர் நடந்த பகுதிகளில் தமிழ்ப் பொதுமக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்குட்பட்ட சூழலிலேயே நாளாந்த வாழ்க்கையை கழிக்கின்றனர்.
கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்ற வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியும், இராணுவமயச் சூழலின் அளவு ஏற்றுக் கொள்ள முடியாதது. அதைவிட, சிறிலங்கா அரசபடைகள் தொடர்ந்தும் விலக்களிப்புடன் செயற்படுகின்றன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சிறிலங்கா தொடர்பான அனைத்துலக அணுகுமுறைகள் 180 பாகை கோணத்தில் மாறி விட்டன.
ராஜபக்ச காலத்தில் பொறுத்துக்கொள்ளாத, விரக்தியை வெளிப்படுத்தியவர்கள் இப்போது, மேலதிக காலஅவகாசத்தைக் கொடுக்க விரும்புகிறார்கள்.
தென் பகுதியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், வடக்கின் சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, முறைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை செய்ய புதிய அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.
சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்களுக்கு மறுசீரமைப்பு தேவைப்படுகிறது.
பிரச்சினைக்கு அரசியல் மற்றும் பொருளாதார தீர்வு மிகவும் அவசியமானது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.