Breaking News

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலமான எதிர்க் கட்சியாக உருவாக்க அரசு முயற்சி: வாசுதேவ



தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், மக்கள் விடுதலை முன்னணியையும் நாட்டினுள் பலமான எதிர்க் கட்சிகளாக உருவாக்க அரசாங்கம் முற்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒரு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் தினேஷ் குணவர்தன இல்லாத தருணத்தில், பிரதான எதிர்கட்சியின் தலைமை யாருக்கு என்ற பிரச்சினை நிலவுகின்றது. ஆனாலும் இதைநாங்கள் முன்னோக்கி கொண்டுச்செல்ல தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் மக்கள் விடுதலை முன்னணியையும் நாட்டினுள் பலமான எதிர்க் கட்சிகளாக உருவாக்கும் அரசின் முயற்சிக்கு, ஜே.வி.பி.யும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் துணைப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க கோரிக்கை விடுத்தமை தொடர்பில், கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை, ஒரு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.