Breaking News

கூட்டமைப்பின் குழப்பம் செ. சிறி­தரன்


ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 30/1
தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்க வேண்­டுமா இல்­லையா என்­பது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் விவா­த­மாகத் தொடங்கி இப்­போது விவ­கா­ர­மாக விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்­தி­ருக்­கின்­றது.

யுத்த மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் அர­சாங்கம் எவ்­வாறு பொறுப்புக்கூற வேண்டும் என்­பதை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் இந்தத் தீர்­மானம் மிகத் தெளி­வாக வரை­ய­றுத்து விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

இந்தப் பிரே­ர­ணையை உள்­ளது உள்­ள­வா­றாக ஏற்று, அதன்­படி செயற்­படப் போவ­தாக உறு­தி­ய­ளித்து அர­சாங்கம் அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. இத­னை­ய­டுத்து, இந்தப் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு, மனித உரிமைப் பேர­வை­யினால் அர­சாங்­கத்­திற்கு ஒரு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் இந்தக் கால அவ­காசம் ஒரு வரு­டத்தைக் கடந்து ஒன்­றரை வரு­ட­மா­கி­யது. ஆயினும் இந்தக் காலப்­ப­கு­தியில் ஆக்­க­பூர்­வ­மான – ஆமோ­தித்து மனப்­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க வகையில், திருப்­தி­க­ர­மான நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இந்தக் காலப்­ப­கு­தியில், ஐ.நா. பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் அர­சாங்கம் மந்­த­மான போக்­கையே கடைப்­பி­டித்­தது. பிரே­ர­ணையில் கூறப்­பட்­டுள்­ள­வாறு விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கு­கின்ற விட­யத்தை உதா­சீ­னப்­ப­டுத்­தி­யது. தொடர்ந்து அதனை உத­றித்­தள்­ளி­யது.

சர்­வ­தேச விசா­ர­ணையை கலப்பு நீதி­வி­சா­ரணை பொறி­மு­றை­யாக மனித உரிமைப் பேர­வையில் உறுப்பு நாடு­களின் பிர­தி­நிதி­களின் முன்­னி­லையில் ஏற்­றுக்­கொண்­டி­ருந்த அர­சாங்கம் உள்­நாட்டில் அந்த நிலைப்­பாட்டில் இருந்து பின்­வாங்­கி­யது மட்­டு­மல்­லாமல், கலப்பு நீதி­வி­சா­ரணை பொறி­மு­றைக்கு இடமே இல்லை. முற்று முழு­தாக உள்­ளக விசா­ர­ணை­க­ளையே நடத்­துவோம். அதில் எந்­த­வி­த­மான மாற்­றமும் கிடை­யாது. முடி­யு­மானால் தடுத்துப் பாருங்கள் என்ற சண்­டித்­தனப் போக்கில் முரண்­பட்ட ஒரு நிலைப்­பாட்டை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான் மனித உரி­மைகள் பேர­வையின் 2017 மார்ச் மாத அமர்வில் ஐ.நா.வின் 30/1 பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு மேலும் 2 வருட கால அவ­காசம் வேண்டும் என கோரி­யி­ருக்­கின்­றது. இரா­ஜ­தந்­திர நிலைப்­பாட்டில், கௌர­வ­மான ஒரு நடை­மு­றை­யாக அர­சாங்­கத்தின் இந்தக் கோரிக்கை குறித்து பரி­சீ­லனை செய்­வ­தற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவை முன்­வந்­தி­ருந்­தது.

ஆனாலும், பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தாக ஏற்று, இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்த பின்­ன­ணியில், உள்­நாட்டில் மனித உரிமை விட­யத்தின் பல்­வேறு அம்­சங்­களில் நில­வு­கின்ற மோச­மான நிலை­மைகள் குறித்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் தனது அறிக்­கையில் கடு­மை­யாகச் சாடி­யி­ருந்தார். அத்­துடன் ஏற்­றுக்­கொண்­ட­வாறு பேர­வையின் பிரே­ர­ணையை, அர­சாங்கம் முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்று வலி­தான முறையில் வற்­பு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

இது ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரி­னதும், ஐ.நா. பேர­வை­யி­னதும் நிலைப்­பாடு. இதன் பின்­ன­ணியில், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு நீதிக்­காக ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்ற தமிழர் தரப்பின் நிலைப்­பாடு, அர­சியல் ரீதி­யான நகைப்­புக்கு உரி­ய­தா­கவும், தீவி­ர­மான அர­சியல் சிந்­தனை நிலை­மையில் சீற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது.

தீர்­வு­களை எட்ட வல்ல தலை­மையைத் தேடும் அர­சியல் பயணம்

கொடுங்கோல் ஆட்சி முறையை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருந்த முன்­னைய அர­சாங்­கத்தைத் தோற்­க­டித்து, ஜன­நா­ய­கத்­தையும் நல்­லாட்­சி­யையும் நிறு­வு­வ­தற்­காக நாட்டு மக்­களில் பெரும்­பா­லானோர் ஆர்வம் கொண்டு செயற்­பட்­டதன் விளை­வா­கவே ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. நல்­லாட்சி அர­சாங்கம் என பெயர் சூட்­டப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான ஆட்சி மலர்ந்­தது. அதற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி ஒத்­து­ழைத்­தி­ருந்­தது.

இந்த நிபந்­த­னை­யற்ற ஆத­ரவும், ஒத்­து­ழைப்பும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளு­டைய எரியும் பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காண உதவும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு முதலில் நம்­பி­யது. பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களும் நம்­பி­னார்கள். ஆனால், அர­சாங்கம் மறை­மு­க­மா­ன­தொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் செயற்­பட்டு, தமிழர் தரப்பின் எதிர்­பார்ப்­புக்­களை உரிய முறையில் நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை.

ஏனோ­தானோ என்ற வகை­யி­லான நட­வ­டிக்­கை­களே எடுக்­கப்­பட்­டன. பேச்­சுக்­களில் தேன் வழிந்­தது. நடை­மு­றை­களில் வஞ்­ச­க­மான போக்கே வெளிப்­பட்டு வரு­கின்­றது.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை, இரா­ணு­வத்தால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களின் விடு­விப்பு, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்ட நீக்கம், பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் இறை­மையின் அடிப்­ப­டை­யி­லா­னதோர் அர­சியல் தீர்வு ஆகிய விட­யங்­களில் அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­போடு செயற்­ப­டு­கின்­றது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நம்­ப­க­மான நல்­லெண்ண சமிக்­ஞை­யைக்­கூட நல்­லாட்சி அர­சாங்கம் உரிய நேரங்­களில் வெளிப்­ப­டுத்­த­வில்லை. அந்தப் பொறுப்பில் இருந்து அது தவ­றி­யி­ருக்­கின்­றது. அதனைத் தட்­டிக்­க­ழித்­தி­ருக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான் கண்­து­டைப்­புக்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­களை, அர­சாங்கம் முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. பொறு­மையைக் கடைப்­பி­டி­யுங்கள். நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ராகத் தென்­னி­லங்­கையில் எழுந்துள்ள தீவி­ர­வாத அர­சியல் போக்­கிற்குத் துணை சேர்த்து, அர­சாங்­கத்­திற்கு அர­சியல் ரீதி­யாக சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தா­தீர்கள் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்கும் பாதிக்­கப்­பட்ட பொது­மக்­க­ளுக்கும் போதித்து வந்­தது.

பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்­ற­மில்லை. அர­சியல் தீர்­வுக்­காகக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாகச் சொல்­லப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பில் தீர்வு கிடைப்­ப­தற்­கான அறி­கு­றி­களைக் காண முடி­ய­வில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு, தமிழர் தாயகப் பிர­தே­சத்தில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறை­மையின் அடிப்­ப­டை­யி­லான சமஷ்டி ஆட்­சிக்­கான வழி­முறை என்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தேர்தல் வாக்­கு­றுதி நிலைப்­பா­டு­க­ளுக்கு முர­ணான வகை­யி­லேயே அர­சியல் தீர்­வுக்­கான ஆலோ­சனை முன்­மொ­ழி­வு­களும், அர­சாங்கத் தரப்பின் நிலைப்­பா­டு­களும் வெளிப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்த நிலையில் ஏமாற்­றத்­திற்கு உள்­ளாகி வரு­கின்ற பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய அழுத்­தங்­களை அர­சாங்­கத்­திற்குக் கொடுப்­ப­தற்குப் பதி­லாக, அர­சுக்­கான நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வலுப்­ப­டுத்திச் செல்­கின்ற போக்­கி­லேயே தமிழ்த்­­தே­சிய கூட்­ட­மைப்பின் கவனம் குவிந்­தி­ருந்­தது. இன்னும் குவிந்­தி­ருக்­கின்­றது.

இதன் விளைவாக மக்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் தலைமை மீது நம்­பிக்கை இழந்து தாங்­களே தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­காக வீதியில் இறங்கிப் போராடத் துணிந்­தார்கள். வடக்கில் பல இடங்­களில் மட்­டு­மல்­லாமல், கிழக்­கிலும் மக்கள் வீதிகளில் இறங்கி, வீதி­க­ளி­லேயே குடி­யி­ருந்து போராடி வரு­கின்­றார்கள்.

இது, தமிழர் தரப்பைப் பொறுத்­த­மட்டில், பாதிக்­கப்­பட்ட மக்­களின் தீவி­ர­மா­னதோர் அர­சியல் நிலைப்­பாடு. தூர­நோக்கும், சாணக்­கி­ய­மு­மில்­லாத மித­வாத அர­சியல் போக்கின் மீதான சலிப்பின் வெளிப்­பாடு.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் உணர்­வு­க­ளையும் அவர்­களின் அர­சியல் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் புரிந்து கொள்­ளாமல் தடம் மாறிச் செல்­கின்ற அர­சியல் தலை­மைக்கு விடுக்­கப்­ப­டு­கின்ற ஓர் அர­சியல் ரீதி­யான எச்­ச­ரிக்­கையின் அடை­யாளம். சாத்­வீகம் மற்றும் ஆயுதப் போராட்­டங்­களின் பின்­னரும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தந்­தி­ரோ­பாய ரீதியில் தீர்வு காணத்­தக்­கதோர் அர­சியல் தலை­மையைத் தேடத் தொடங்­கி­யி­ருக்­கின்ற ஓர் அர­சியல் பய­ணத்தின் ஆரம்­ப­மு­மாகும்.

இதன் அடை­யா­ள­மா­கவே ஐ.நா.வின் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்­கான மேல­திக கால அவ­கா­சத்தை வழங்க வேண்டும் என்றும், கால அவ­காசம் வழங்கக் கூடாது என்றும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பிள­வு­பட்டு இருகூர் நிலையில் மோதிக் கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

கூட்­ட­மைப்பின் இரு­வேறு நிலைப்­பா­டுகள்

தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன், கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், தமி­ழ­ரசுக் கட்­சியின் வெளி­வி­வ­காரச் செய­லா­ள­ரு­மா­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா ஆகியோர், ஐ.நா. பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கிய துரை­ரட்­ண­சிங்கம், சர­வ­ண­பவன் ஆகி­யோரும் இதற்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றார்கள்.

கூட்­ட­மைப்பின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் இவர்கள் ஐவ­ரையும் தவிர ஏனைய 11 பேரும் இலங்கை அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­கப்­படக் கூடாது எனக் கோரி ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ருக்குக் கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்­தார்கள். இந்தக் கடி­தமே கூட்­ட­மைப்­புக்குள் சர்ச்­சை­க­ளையும், விவா­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்தி விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கின்­றது.

பிள­வு­பட்­டுள்ள இரண்டு தரப்­பி­ன­ருமே ஐ.நா.வின் பிரே­ர­ணையை முழு­மை­யாக அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும் என்­பதில் உறுதி­யான ஒத்த கருத்தைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால் அர­சாங்கம் கோரி­யி­ருக்­கின்ற கால அவ­கா­சத்தைக் கொடுப்­பதா இல்­லையா என்­ப­தி­லேயே அவர்­க­ளுக்குள் முரண்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்கம் சில முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்­றது. மேலும் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு வச­தி­யாக அர­சாங்கம் கோரு­வதைப் போல அதற்குக் கால அவ­காசம் வழங்க வேண்டும். ஆனால் கடும் நிபந்­த­னை­யுடன் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களைக் கண்­கா­ணித்து பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பது கூட்­ட­மைப்புத் தலை­மையின் நிலைப்­பாடாகும்.

ஆனால் போதிய அளவு கால அவ­கா­சமும் சலு­கை­களும் அர­சாங்­கத்­திற்கு ஏற்­க­னவே வழங்­கி­யா­கி­விட்­டது. ஆனால் முன்­னேற்­றத்தைக் காண­வில்லை. ஆகவே அர­சாங்­கத்தை இனி­மேலும் நம்பிப் பய­னில்லை. அடுத்த கட்­ட­மாக மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை விட­யத்தை மனித உரிமைப் பேர­வையின் பொதுச் சபைக்குக் கொண்டு சென்று அங்­கி­ருந்து பாது­காப்புச் சபையின் கவ­னத்­திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் சர்­வ­தேச போர்க்­குற்ற நீதி­மன்­றத்தில் அல்­லது போர்க்­குற்றம் தொடர்­பா­ன­தொரு தீர்ப்­பா­யத்தை உரு­வாக்கி அதில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பது பதி­னொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் நிலைப்­பா­டாகும்.

பதி­னொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் 4 பங்­காளிக் கட்­சி­களில் 3 கட்­சிகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. அத்­துடன் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளான சில பாராளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இதில் இணைந்­தி­ருக்­கின்­றார்கள்.

மோதல்­களும் காலத்தின் தேவையும்

கால அவ­காசம் வழங்கக் கூடாது என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு கூட்­ட­மைப்பின் பதி­னொரு பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் எப்­படி கடிதம் எழுத முடியும்? யாரைக் கேட்டு அதனை அவர்கள் செய்­தார்கள் என்று கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரா­கிய பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் யாழ்ப்­பாணம் வட­ம­ராட்சி பிர­தே­சத்தில் நடை­பெற்ற ஒரு கூட்­டத்தில் உரை­யாற்­று­கையில் பகி­ரங்­க­மாக வெகுண்­டெழுந்தார்.

இவ்­வாறு கடிதம் எழு­து­வது பற்றி தங்­க­ளுக்கு அவர்கள் ஏன் ஒன்றும் சொல்­ல­வில்லை? சர்­வ­தேச விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக உள்ள தனக்­குக்­கூட அவர்கள் தெரி­விக்­கா­தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், இவர்கள் என்ன தெரிந்து கையொப்பம் இட்­டார்கள்? எந்த முட்டாள் கால அவ­காசம் வேண்டாம் எனச்­சொல்­லுவான்? இவர்கள் அவ்­வாறு ஏன் செய்­தார்கள் எனத்­தெ­ரி­ய­வில்லை. எங்கள் உறுப்­பி­னர்­க­ளையும் சேர்த்­துதான் சொல்­கிறேன் அவர்­க­ளுக்கு இதன் தாத்­ப­ரியம் புரி­யுமா? இவ்­வ­ளவு நாட்­க­ளா­கியும் இந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு உலக அறிவு தெரி­ய­வில்­லையா என்றும் அவர் வின­வி­யி­ருந்தார்.

அது மட்­டு­மல்­லாமல், இந்த கடித விவ­காரம் குறித்து, கூட்­ட­மைப்பின் பாராளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­ட­போது, அதில் கையெ­ழுத்­திட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சுமந்­திரன் மீண்டும் முட்­டாள்கள் என விளித்­த­தை­ய­டுத்து, அங்கு கார­சா­ர­மான விவாதம் எழுந்­தி­ருந்­தது.

அப்­போது, அந்தக் கடி­தத்தில் என்ன எழு­தி­யி­ருக்­கின்­றது, அந்தக் கோரிக்­கையில் உள்ள நியாயம் என்ன என்­பதைத் தெளி­வாக உணர்ந்து தனது மனச்­சாட்­சிக்கு ஏற்ற வகை­யி­லேயே அதில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­த­தாகத் தெரி­வித்த பாராளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன், அதற்­காக என்ன தண்­டனை கொடுத்­தாலும் அதனை ஏற்­கத்­த­யா­ராக இருப்­ப­தாகக் குறிப்­பிட்டார்.

கையெ­ழுத்­திட்­டது குற்றம் என்று கரு­தினால், அதற்­காகக் கட்­சியில் இருந்து தன்னை நீக்­கி­னாலும் நீக்­குங்கள். அதற்­காகத் தான் கவ­லைப்­படப் போவ­தில்லை. என்­னைப்­பொ­றுத்­த­மட்டில் சரி­யா­கவே செயற்­பட்­டி­ருக்­கிறேன் என்று உறு­தி­பட அவர் கூறினார்.

அதே­வேளை, அந்தக் கடி­தத்தில் கையெ­ழுத்­திட்­ட­தாகச் சொல்­லப்­பட்­ட­வர்­களில் மூன்று பேர் கையெ­ழுத்­தி­ட­வில்லை என்று தங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது பற்­றியும் அங்கு பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட அந்த மூவரில் ஒருவர் அவ்­வாறு எவ­ருக்கும் கூற­வில்லை என அந்தக் கூட்­டத்தில் தெரி­வித்­த­தை­ய­டுத்து, சுமந்­தி­ரனின் அந்தக் குற்­றச்­சாட்டும் பிசு­பி­சுத்துப் போனது.

அர­சாங்­கத்­திற்குக் கால அவ­காசம் கொடுப்­பது குறித்து கருத்து வெளி­யி­டு­வ­தற்கு முன்­னரே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இந்தக் கூட்­டத்தைக் கூட்டி கலந்­தா­லோ­சித்­தி­ருக்க வேண்டும் என்று பாராளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் இங்கு சுட்­டிக்­காட்­டினார். அப்­போது தலைவர் இரா.சம்­பந்தன் தான் அர­சுக்கு கால அவ­காசம் கொடுப்­பது தொடர்பில் அவ­ச­ரப்­பட்டு கருத்து வெளி­யிட்­டது தவறு என்­பதை ஏற்றுக் கொண்டார்.

அதே­நேரம் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பாராளு­மன்ற உறுப்­பி­னர்­கனை முட்­டாள்கள் என விளித்­தமை பிழை­யான நட­வ­டிக்கை என்­பதை இரா. சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­ய­துடன், கூட்­ட­மைப்­புக்குள் கருத்து வேற்­று­மைகள் இருக்­கலாம். அதற்­காக ஒரு­வ­ருக்­கொ­ருவர் மோதிக்­கொள்ளக் கூடாது என்­பதை வலி­யு­றுத்தி அனை­வரும் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதி­களில் வெயில் கார­ண­மாகப் புழு­தியில் தோய்ந்தும், கொட்டும் மழையில் நனைந்தும், இராக்­காலப் பனிப்­பொ­ழிவின் குளிரில் நடுங்­கியும், உரி­மை­க­ளுக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமக்குச் சொந்­த­மான காணி­களில் அடாத்­தாகக் குடி­யி­ருக்­கின்ற இரா­ணு­வத்தை அங்­கி­ருந்து வெளி­யேற்றி தமது காணி­களில் தங்­களைக் குடி­யேற்ற வேண்டும் என்று தொண்­டையில் தண்ணீர் வற்ற கோஷங்­களை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

மறுபுறத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களையும், கையேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் அரசாங்கம் என்ன செய்தது, அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழுது அரற்றி சோறு, தண்ணீரின்றி ஒப்பாரி வைத்துப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு போராடுகின்ற மக்களுக்குச் சரியான அரசியல் தலைமையை வழங்கி அவர்களைச் சரியான முறையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருந்து கூட்டமைப்பின் தலைமை வழி தவறிச்சென்று கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு நன்மை பயக்கின்ற எல்லையைத் தொட்டதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து, அவர்களை உதாசீனம் செய்கின்ற அரசாங்கத்தின் போக்கிற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை துணை போவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடாகாது.

பாதிப்புகளுக்கு உள்ளாகி நீதியையும் நியாயத்தையும் எதிர்நோக்கி, காலம் கடந்த நிலையில், அதற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இத்தகைய அரசியல் போக்கானது, ஒட்டு மொத்தமாகத் தமிழினத்தையே படுகுழிக்கு இழுத்துச் செல்வதற்கு ஒப்பானதாகவே அவதானிகளினால் கருதப்படுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் நிலையானது, மிகவும் ஓர் இக்கட்டான சூழலில் இப்போது சிக்கியிருக்கின்றது. இந்த நிலையில், அனுபவமும் ஆற்றலும், அரசியல் ஞானமும் பொருந்தியுள்ள தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் மக்களையும் தவறான வழியில் இட்டுச் சென்றிருந்தது என்ற எதிர்காலப் பழிச் சொல்லுக்கு இடமளிக்காத வகையில் அவர் செயற்பட வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

தொடர்புடைய முன்னைய செய்தி

கூவத்தூர் விடுதி வகுப்புக்களில் பம்மிக்கொண்டு நின்றவர்கள்

கையொப்பமிட்ட 7முட்டாள்கள் முடிவை மாற்றினர்-வவுனியாவில் பரபரப்பு(காணொளி)

வவுனியா கூவத்தூர் விடுதி கூட்டத்தின்பின் உறுப்பினருக்கு ஏற்பட்ட டவுட்

சுமந்திரன் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்