இராணுவத்தினரின் போர்க்குற்ற அறிக்கை கோட்டாபயவிடம் கையளிக்கப்படும்
போர்க் குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை எனும் வாக்குமூலங்கள் அடங்கிய 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கை, இன்று (திங்கட்கிழமை) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வைத்து மேற்படி அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.
லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாநயக்க, ரியல் அட்மிரல் எச்.ஆர். அமரவீர, ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, மேஜர் ஜெனரல் சீவலி வனிகசேகர, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகிய அதிகாரிகளும் இந்த அறிக்கையை இன்று கையேற்கவுள்ளனர்.
மேலும் அறிக்கையை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட முன்னர், இராணுவ அதிகாரிகளினால் ஜனாதிபதியிடமும் கையளிக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி ரியல் அட்மிரால் சரத் வீரசேகரவினால் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கமும் அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் யுத்தம் முடிந்து, இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என வெளியிடப்படும் வாக்குமூலம் அடங்கிய முதலாவது அறிக்கை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.