ஐ.நா.வுக்கு சொல்லும் செய்தியாக கிழக்கு ‘எழுக தமிழ்’ பிரகடனம் அமையும்: வசந்தராசா
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கும் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் பேசும் மக்கள் சொல்லப் போகின்ற செய்தியாக, ‘எழுக தமிழ்’ கிழக்குப் பிரகடனம் அமைந்திருக்குமென தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருக்கின்ற தமிழ் பேசும் சமூகங்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டுமென்பதே தமது கோரிக்கையாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் திகதி மட்டக்களப்பில் பிரமாண்டமான முறையில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி பற்றியும் அதன் பிரகடனம் தொடர்பாகவும் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசியல் கட்சி வேறுபாடுகளோ தமிழ் முஸ்லிம் என்ற இன மத வேறுபாடுகளோ இன்றி இந்நிகழ்வுகளில் அனைவரும் பங்குபற்றி சிறுபான்மையினரின் ஏகோபித்த குரலாக எழுக தமிழை ஒலிக்கச் செய்ய வேண்டுமென தான் வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனின் மட்டக்களப்புக்கான வருகையோடு ‘எழுக தமிழ்’ கிழக்குப் பிரகடனம் உலகறியச் செய்யப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கின் எழுக தமிழ் பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.