விடிவே கிடைக்காதா ? - ரொபட் அன்டனி
பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று சர்வதேச
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தர ணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது. உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத்திற்குட்பட்ட சட்ட மொன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையை கண்டறியும் நிறுவனத்தை உருவாக்கவேண்டும். ஹெபியஸ் கோபஸ் முறைமை விடயத்தில் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். காணாமல்போனோரின் உறவினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பும் உதவியும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு விசேடமாக சிறுவர்கள், பெண்களுக்கு நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் அவசரகால நிலைமையின் கீழ் தேசிய நஷ்ட ஈட்டுக் கொள்கையை அரசாங்கம் தயாரிக்கவேண்டும்.
இலங்கையை பொறுத்தவரை பல்வேறு விடயங்கள் எட்டாக்கனியாகவே உள்ளன. என்னதான் முயற்சி செய்தாலும் இறுதியில் கிடைத்துவிடாத நிலைமையில் பல விடயங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு இதுவரை தீர்வைக் காண முடியாத சூழல் நிலவுகின்றது. என்னதான் முயற்சித்தாலும் தமிழருக்கான தீர்வு என்பது எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது. அதேபோன்றுதான் தற்போது காணாமல் போனோரின் விவகாரமும் மாறியுள்ளது.
காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கின்றது. அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடக்கப்போகின்ற நிலையில் இன்னும் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற சிறிதளவு உண்மையை கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.
யுத்தம் முடிந்ததிலிருந்து காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ள முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். அவ்வப்போது மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். போராட்டங்களையும் நடத்திவருகின்றனர். காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை கேட்டவாறே மக்கள் கிளர்ந்து எழுந்து வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் காணாமல் போனோரின் உறவினர்கள் தமது போராட்டத்தை விரிவுபடுத்த ஆரம்பித்தனர். யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட மனோ கணேசன் மற்றும் விக்ரமபாகு கருணாரட்ன போன்றோர் தலைமையில் ஒருசிலர் காணாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்திவந்ததுடன் சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்தனர் என்பதனை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
இந்நிலையில் யுத்தம் முடிந்ததும் மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அந்தவகையில் 2010 ஆம் ஆண்டு அப்போதைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்து இந்த நாட்டில் போர் ஏற்பட்டதற்கான காரணத்தையும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கான பரிந்துரைகளையும் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியது.
அந்தவகையில் கொழும்பில் தனது விசாரணை அமர்வுகளை நடத்திய கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு மாவட்ட மட்டங்களிலும் அமர்வுகளை நடத்தியது. கொழும்பில் நடைபெற்ற அமர்வுகளில் சாட்சியமளித்த மக்கள் அரசியல் தீர்வு, நல்லிணக்கப் பொறிமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து யோசனைகளை முன்வைத்தனர்.
ஆனால் மாவட்ட மட்டங்களில் விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. அதாவது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற அமர்வுகளில் சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட மக்கள் காணாமல் போன தமது உறவுகளை தேடித்தருமாறு கதறி அழுதனர். மன்றாடினர். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் உறுப்பினர்களை பார்த்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு மன்றாட்டமாக வேண்டி நின்றனர்.
அந்த மக்களின் கதறல்கள் ஆணையாளர்களை நிச்சயம் பாதித்திருக்கும். எது எவ்வாறு இருப்பினும் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசேட ஆணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
எனினும் கடந்த அரசாங்கம் அதனை உடனடியாக செய்துவிடவில்லை. மாறாக இரண்டு வருடங்கள் கழித்து அதாவது 2013 ஆம் ஆண்டு மக் ஷ்வல் பரணகம தலைமையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழுவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விசாரணை அமர்வுகளை நடத்தியது. அந்த அமர்வுகளில் பழைய நிலையேதான் காணப்பட்டது. உறவுகளை தொலைத்த மக்கள் ஆணைக்குழு முன்பாக கதறியழுது காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரினர்.
அதன்படி 19 ஆயிரத்துக்கும் அதிகமான எழுத்துமூல முறைப்பாடுகள் பரணகம ஆணைக்குழுவுக்கு கிடைத்தன. எனினும் இந்த ஆணைக்குழுவில் சர்வதேசமும் பாதிக்கப்பட்ட தரப்பும் நம்பிக்கை வைக்கவில்லை. இவ்வாறான நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. ஆட்சிமாற்றத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக காணாமல் போனோர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றும் மக்கள் நம்பிக்கை வைத்தனர். அதற்கு ஏற்றால்போல் புதிய அரசாங்கமும் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியது.
அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணையை வழங்கியது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்க பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்பன குறித்து வாக்குறுதிகளையும் வழங்கியது.
காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. தென்னிலங்கையின் கடும்போக்கு சக்திகள் அதனை கடுமையாக எதிர்த்தபோதும் அரசாங்கம் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
ஆனால் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இன்னும் அந்த அலுவலகம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய அரசாங்கம் காணாமல் போனோர் விடயத்தில் தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கையிலிருந்த பாதிக்கப்பட்ட மக்கள் பொறுமையின் எல்லைக்கு சென்றனர். அதன் பின்னரே வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆரம்பித்தனர்.
நிலைமை கட்டுமீறிச் செல்லவே தற்போது அரசாங்கம் தலையிட்டு அதனை நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுடன் தொடர்ச்சியாக விளையாட முற்படக்கூடாது. அந்த மக்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிவதற்கான உரிமையை கொண்டுள்ளனர். அதனை யாரும் மறுக்க முடியாது.
காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் திண்டாடிவருகின்றனர். காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா என்பது கூட தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த விடயத்தில் தலையிட்டு விரைவாக உண்மையை கண்டுபிடிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து தயக்கம் காட்டிவருகின்றது.
இது உணர்வுபூர்வமான விடயம் என்பதனை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தில் ஆழமாக செயற்பட முயற்சித்தால் தென்னிலங்கையின் கடும்போக்குவாதிகள் அதனை பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தை கூட செய்துவிடுவார்கள். எனவே இதனை அவதானமாக கையாளவேண்டும். ஆனால் அதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காமல் இருக்க முடியாது. இந்தக் காரணத்தை வைத்து கடந்த அரசாங்கம் நீதி வழங்காமல் இருந்தமையின் காரணமாகவே மக்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.
எனவே காணாமல் போன தமது உறவுகள் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு விஜயம் மேற்கொண்டு கடந்த முறை ஐக்கிய நாடுகள் அமர்வில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்திருந்த ஐ.நா. செயற்குழு தற்போது தமது அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் முன்வைத்திருந்தது.
அந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதாவது பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள், மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது என்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு தாக்கல் செய்த அறிக்கை ஊடாக அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.
அத்துடன் உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத்திற்குட்பட்ட சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையைக்கண்டறியும் நிறுவனத்தை உருவாக்குங்கள். இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா. செயற்குழு பரிந்துரை செய்திருந்தது.
ஹெபியஸ் கோபஸ் முறைமை விடயத்தில் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பும் உதவியும் வழங்கவேண்டும்.
பாதிக்கப்பட்டோருக்கு விசேடமாக சிறுவர்கள், பெண்களுக்கு நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் அவசரகால நிலைமையின் கீழ் தேசிய நஷ்டஈட்டுக்கொள்கையை அரசாங்கம் தயாரிக்கவேண்டும்.
பாதிக்கப்பட்டோர் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியைக் கண்டறிவதற்குமான உரிமையை உறுதிப்படுத்தி காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்கவேண்டும். காணாமல்போனோர் தொடர்பாக புதிதாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் அனைத்தும் சரியான முறையில் பொலிஸாரினால் விசாரிக்கப்படவேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாக செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அனைத்துவிதமான அனுமதிகளும் அவசியம்.
பாதிக்கப்பட்டோருக்கு சமூக கொடுப்பனவுகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படவேண்டும். பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும்.
காணாமல் போனோரின் உறவினர்களுக்கான முறையான மீள்குடியேற்றத் திட்டமொன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டோர் அவர்கள் எந்த இனத்தவராக இருந்தாலும் சரி நினைவு நிகழ்வுகளை நடத்துவதை மதிக்கவேண்டும்.
உண்மையைக் கண்டறியும் சர்வதேச உதவியை மற்றும் நீதியை நிலைநாட்டும் நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் பொறிமுறைக்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கவேண்டும். சுயாதீன நிபுணத்துவமிக்க நிபுணர்களை உண்மைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு இணைத்துக் கொள்ளவேண்டும். இந்த செயற்பாட்டுக்கும் சிவில் சமூகத்திலிருந்து பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளுங்கள். உண்மையைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக தடவியல் நிபுணர்களின் உதவிகளைப் பெறலாம். மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் அவசியம்.
முறையான விசாரணை நடத்துவதற்காக குறிப்பிட்ட இடங்களை பாதுகாக்கவேண்டும். குறிப்பாக மாத்தளை, மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணைகள் மீள் ஆரம்பிக்கப்படவேண்டும். இவ்வாறு மிகவும் பரந்துபட்ட பரிந்துரைகளை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு முன்வைத்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே காணாமல் போனோர் விவகாரம் தற்போது இந்த நிலையை அடைந்துள்ளது. இந்த ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த அலுவலகம் இயங்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையிழக்கும் அபாயம் தொடர்கின்றது. இதற்கு அரசாங்கம் தொடர்ந்து இடமளிக்கக்கூடாது. விரைவாக இந்த விடயத்தில் உண்மையை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். மக்கள் நீதிக்காக ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அந்த காத்திருப்பு ஏமாற்றமளிப்பதாக மாறிவிடக்கூடாது. ஐக்கிய நாடுகள் செயற்குழு குறிப்பிட்டதைப்போன்று காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும். அதற்காக விசேட பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.
அதாவது ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போன்று காணாமல் போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்வதற்கான உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்குள்ளது. அதேபோன்று அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்குரிய நஷ்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் என்பதனை மறந்துவிடக்கூடாது.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்