மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
மிருசுவிலில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட, சிறிலங்கா இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் மேல்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
2000ஆம் ஆண்டு, டிசெம்பர் 19ஆம் நாள், மிருசுவில் பகுதியில் வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போட்டு மூடப்பட்டனர்.
இந்தப் படுகொலைகள் தொடர்பான வழக்கில், சிறிலங்கா இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சுனில் ரத்நாயக்க சார்பில் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், எதிர்வரும், ஜூன் 5, 6,7, 12, 13, மற்றும் 14ஆம் நாள்களில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.