Breaking News

இலங்கையின் 69ஆவது சுதந்திர நாள் – கொழும்பில் கோலாகலம், வடக்கில் துக்கம்

சிறிலங்காவின் 69 ஆவது சுதந்திர நாள் இன்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள், சிறிலங்கா சுதந்திரமடைந்ததை நினைவு கூரும் வகையில் இன்று காலை 8.30 மணியளவில் காலி முகத்திடலில் தேசியக்கொடியேற்றல், மற்றும் இராணுவ அணிவகுப்புகள் என்பன சிறிலங்கா அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளன.

சிறிலங்காவின் படைபலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் போர்த்தளபாடங்களைக் காட்சிப்படுத்தும் இராணுவ அணிவகுப்பு இன்றைய சுதந்திர நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளது

சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்து இன்றுடன் 69 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மக்களுக்கான உரிமைகள், சுதந்திரம் கிடைக்காத நிலையே தொடர்கிறது.

இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்தும், இன்றைய நாளை துக்கநாளாக கடைப்பிடிக்க வடக்கில் பலவேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்று யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக, கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கேப்பாபிலவு பகுதியில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி, விமானப்படைத்தளம் முன்பாக கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களும் இன்றைய நாளை கறுப்பு நாளாக கடைப்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பிலும் தமது காணிகளை பறிகொடுத்த மக்களும் இன்றைய நாளை துக்கநாளாக கடைப்பிடிக்கப் போவதாக கூறியுள்ளனர்.

அதேவேளை, இன்றைய நாளை கறுப்புநாளாக கடைப்பிடிக்க மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், இந்த அமைப்பின் சார்பில் கறுப்புநாளை கடைப்பிடிக்க மன்னார் மாவட்ட நீதிவான் மூலம், காவல்துறையினர் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளனர்.