கேப்பாபுலவு பிலவுகுடியிருப்பு மக்களின் போராட்டம் 3 ஆவது நாளாக இன்றும் முன்னெடுப்பு
விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கால அவகாசத்தை கோரிய போதிலும் அதனை ஏற்பதற்கு அக்கிராம மக்கள் மறுத்திருந்த நிலையில் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணிகள் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
விமானப்படையினர் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளை அளந்து கையளிப்பதற்காக காணி உரிமையாளர்களை நேற்றுமுன்தினம் குறித்த பகுதிக்கு வருமாறு கேப்பாபுலவு கிராம சேவை உத்தியோகத்தர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கமைய மக்கள் அங்கு சென்றிருந்த போதிலும், எந்தவொரு அதிகாரியும் காணிகளை அளந்து கையளிப்பதற்கு வருகைதராத நிலையில், தமது காணிகள் மீள வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து வனவளத் திணைக்களத்தினருடன் கலந்துரையாடி காணிகளை வழங்குவது குறித்து அறிவிப்பதாக தொலைபேசி ஊடாக பிரதேச செயலாளர் சிவபாலன் குணபாலன் வழங்கிய உறுதிமொழியை ஏற்பதற்கும் மக்கள் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சம்பவ இடத்திற்கு சென்ற வன வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகள் வன வளத் திணைக்களத்திற்கு சொந்தமானது அல்லவென்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை பிரதேச செயலாளரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் அந்த உறுதிமொழியையும் ஏற்க மறுத்த பிலவுக்குடியிருப்பு மக்கள் அங்குள்ள இராணுவ முகாமிற்கு அருகில் கூடாரம் அமைத்து நேற்றுமுன்தினம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைபற்று பிரதேசசெயலர் ஆகியோர் அங்கு சென்று மக்களை சந்தித்து, இரண்டு வாரகால அனுமதி கோரியபோதும் அவகாசம் வழங்க மக்கள் நிராகரித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் ஆகியோர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை அளந்து மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என எஸ்.சிவமோகன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி வருகைதந்து கேப்பாபிலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டிருந்தாக வட மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மக்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும் அரச அதிகாரிகளின் கால அவகாசத்திற்கு இணக்காது தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் நிற்காது அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இது குறித்தும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கு இராணுவம் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரியோகித்து வருவதாகவும் தெரிவிக்கும் மக்கள் எனினும் எவ்வாறான அழுத்தங்கள் விடுக்கப்படினும்,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திலிருந்து அகலப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்
காணிவிடுப்பு தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாகவும், அனைவரும் கால அவகாசம் கோருவதாகவும் இவ்வாறு அவகாசம் கோரி, தமக்கு பொய், பித்தலாட்டம் காட்ட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என மக்கள் தெரிவித்தனர்.
இராணுவம் தமது வருமானங்களை பெற்று வருவதாகவும், பாடசாலைணலய கூட விடாது தமது பிள்ளைகள் தாவாரத்தில் ஒதுங்கியிருந்து கல்வி கற்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமது உயிர் போனாலும் குறித்த காணியை மீளப் பெற்றுக்கொள்ளும் வரை போராட்டத்தை கைவிட்டு அகலமாட்டோம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பாதையை பயன்படுத்தும் விமானப்படையினரின் நடமாட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளதால் அவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என படையினர் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமது காணிகளுக்கு செல்லும் வீதி நேற்று காலை விமானப்படையினரால் அவசரமாக அடைக்கப்பட்டது ஏன் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் எவருடைய பசப்பு வார்த்தைகளையும் நம்பி போராட்டத்தை கைவிட்டு விலகிச் செல்ல முடியாது என்றும் மக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைக் கொன்றுதான் காணியை விடவேண்டும் என்றால் தாங்கள் அனைவரும் சாக தாயராகவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் காடுகள் 2002 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த 84குடும்பங்களுக்கு 2003 ஆம் ஆண்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எனினும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெயர்ந்த இந்த மக்கள் 2012 ஆம் ஆண்டு மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட போதிலும்,விமானப்படையினர் குறித்த காணிகளை கையகப்படுத்தி வைத்திருந்ததால் அவர்கள் தற்காலிக இடமொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டும் இன்னமும் இந்த மக்களுக்கு காணிகள் கையளிக்கப்படாது தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை இந்த புலவுக்குடியிருப்பு கிராம மக்கள் மாத்திரமன்றி இறுதி யுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த, முல்லைத்தீவு, கேப்பாப்புலவு கிராமத்தை சேர்ந்த 287 குடும்பங்களின் 500 க்கும் மேற்பட்ட காணிகளும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.