ஆபிரிக்காவுடன் நெருங்கும் இலங்கை – எதியோப்பியாவில் புதிய தூதரகம் அமைக்கிறது
ஆபிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக, ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள எதியோப்பியாவில், தூதரகம் ஒன்றை சிறிலங்கா திறக்கவுள்ளது.
எதியோப்பியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
எதியோப்பியா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அப்துல்லா ஜெமேடாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
எதியோப்பிய அதிபர் முலாது தெசோமையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். இதன் போது, ஆபிரிக்காவின் இராஜதந்திர கேந்திரமாக உள்ள எதியோப்பியாவில் சிறிலங்கா தூதரகத்தை திறந்து வைப்பதற்கான காரணத்தை அவர் விளக்கிக் கூறவுள்ளார்.
ஜெனிவா உள்ளிட்ட அனைத்துலக அரங்குகளில், சிறிலங்காவுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரைவைப் பெற முடியாமல் போனமை, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனைக் கருத்தில் கொண்டு, ஆபிரிக்க நாடுகளுடன் மேலும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகிறது.