வைத்தியர்கள் வேலை நிறுத்தம்
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு 12 மணி வரை நீடிக்கவுள்ளது.
சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை அதிகரிப்பதற்கு, நேற்று கூடிய நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமன்த ஆனந்த கூறினார்.
இதேவேளை நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.