70ஆவது சுதந்திர தினத்திற்கு நாடு மிஞ்சப்போவதில்லை :மஹிந்த ஆரூடம்
காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது, ஒற்றையாட்சியை சிதைத்து விட்டு பிளவுபட்ட இலங்கைக்குள் பொலிஸ் அதிகாரத்துடனான தனிப்பிராந்திய ஆட்சிகள் உருவாக்குவதற்காகவா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 70 ஆவது சுதந்திர தினத்திற்கு நாடு மிஞ்சப்போவதில்லை எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.
69ஆவது சுதந்திர தினம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
69 ஆவது சுதந்திர தினத்தை இன்று நாங்கள் அனுஷ்டிக்கின்றோம். இந்த தினத்தில் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள சுதந்திரம் மற்றும் சுயாதீனதன்மை தொடர்பில் பெற்றோர்கள், முதியவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துகின்றனர். ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கையில் 70 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிப்பதற்கு நாடு மிஞ்சுமா எனத் தெரியவில்லை.
இலங்கையை பிளவுபடுத்தி தனித்துவமான பொலிஸ் அதிகாரங்களுடன் பிராந்திய ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசியல் தலைமைத்துவங்கள் மிகவும் அவசரமாக செயற்படுகின்றனர். இதனைத் தவிர 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கொழும்பில் அமையப்பெற்றுள்ள கிறான் ஒரியன்டல் ஹோட்டல் போன்ற சிறிய அபிவிருத்தி திட்டங்களில் இருந்து எமது ஆட்சிக் காலத்தின் பாரிய அபிவிருத்தி திட்டமான நுரைச்சோலை அனல் மின் நிலையம் வரை அனைத்து தேசிய வளங்களையும் விற்கின்றனர்.
அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களிலும் அதனை சூழவும் பாரிய நிலப்பரப்பு அந்நிய நாடுகளுக்கு வழங் கப்பட்டுள்ளது. காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற போது இலங்கைக்கு விட்டுச் சென்ற ஒற்றையாட்சியை சிதைத்து அதனை பிளவுப்படுத்தவும் தேசிய வளங்களை வெளிநாட்டவ ர்களுக்கும் விற்கவுமா இந்த சுதந்திரதினம் என தற்போதைய ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியாகும்.