Breaking News

கேப்பாப்பிலவு மக்களின் நெஞ்சுரம் கண்டு நெகிழ்ந்தோம்

தாம் வாழ்ந்த கேப்பாப்பிலவு மண்ணில் தம்மைக் குடியமர அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்பாப்பிலவு கிராமம் இப்போது விமானப் படையினரின் வசம் உள்ளது. யுத்தம் முடிந்து நல்லாட்சி அரசு செய்கின்ற போதிலும் கேப்பாப்பிலவு மக்களை அவர்களின் சொந்த இடத்தில் குடியமர விமானப்படை அனுமதி கொடுக்கவில்லை என்ற செய்தி இதுவரை எவரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதி மக்கள் தங்களின் வாழ்விடத்தை மீட்டெடுப்பதென முடிவு செய்து விமானப் படையினரின் முகாம் முன்பாக அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொந்த இடத்தை இழந்து; யுத்தத்தில் உறவுகளை இழந்து; ஒட்டுமொத்தத்தில் தேடிய தேட்டம் எல்லாம் இழந்து நிர்க்கதி நிலையில் இருக்கின்ற போதிலும் தங்கள் சொந்த மண்ணை விமானப் படையிடம் இருந்து மீட்டெடுக்க கேப்பாப்பிலவு மக்கள் முடிவு செய்தமை அவர்களின் நெஞ்சுரத்தையும் ஊர்ப்பற்றையும் காட்டி நிற்கும்.

தங்களின் பிரச்சினையை ஆட்சியாளர்கள் கவனிக்கவில்லை. அதிகாரிகள் பார்க்கவில்லை. தேர்தல் காலத்தில் கூப்பிய கையினராய் வந்து போகும் நம் மக்கள் பிரதிநிதிகள் கவனிக்கவில்லை.

ஆகையால் நாங்களே எங்கள் மண்ணை மீட்டெடுப்போம் என்று முடிவு செய்து அதற்காக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் கண்டு நெஞ்சம் நெகிழாமல் இருக்க முடியாது.

சொந்த மண்ணை மீட்பதற்காக அவர்கள் நடத்தும் போராட்டம் உண்மையில் ஒரு வரலாற்றுப் பதிவுக்குரியது. அந்த மக்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். அவர்களின் நியாயமான கோரிக்கையை எவரும் உதாசீனம் செய்துவிட முடியாது.

சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து தங்கள் வாழ்விடத்தை மீட்க நடத்தும் போராட்டத்துக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

கூடவே மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்புகின்ற ஒவ்வொரு சிங்களச் சகோதரர்களும் கேப்பாப்பிலவு மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு தமது தார்மீக ஆதரவைத் தருவது அவசியம்.

மிகக் கொடூரமான யுத்தத்தை அனுபவித்த தமிழ் மக்கள் எந்தளவு தூரம் நசுக்கப்படுகின்றனர். அவர்கள் அனுபவிக்கும் அவலங்கள் எத்தன்மையது என்பதற்கு கேப்பாப்பிலவு மக்களே நல்ல உதாரணம். எனினும் இவை பற்றி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கவனம் செலுத்துவதில்லை. 

மாறாக இனப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதாகத் கூறி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வந்து போகும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் இப்போது சுதந்திரமாக வாழ்வதாகவே தமது அறிக்கைகளைப் பதிவு செய்கின்றனர்.

ஆனால் இங்கோ மீளக்குடியமர்வதற்குக் கூட மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய அவலத்தில் உள்ளனர். இந்த நிஜங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

எது எவ்வாறாயினும் தங்கள் வாழ்விடத்தை மீட்பதற்காகத் தொடர்போராட்டம் நடத்தும் கேப்பாப்பிலவு மக்களுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.இவை வரலாற்றில் பதிவாகி எதிர்காலத்தில் மக்களால் பேசப்படும் என்பது சர்வநிச்சயம்.