சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்தால் இன்று மகிந்தவிடம் கெஞ்சத் தேவையில்லை
நிரந்தரத் தீர்வுக்கான பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்புத் தேவையென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது இரா.சம்பந்தர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நிரந்தர தீர்வுக்கான பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்புத் தேவையென இரா. சம்பந்தர் கேட்டுக் கொண்ட மேடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சினைக்கான தீர்வில் மகிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்புத் தேவை என்று கேட்பதன் மூலம் மகிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்புக் கிடைத்துவிடும் என்று சம்பந்தர் நம்புகிறாரா? அல்லது நாங்கள் அவரிடம் ஒத்துழைப்பைக் கேட்டோம். அவர் தரவில்லை. அதனால் நாங்கள் மீண்டும் ஜனநாயக வழியில் போராட்டத்தை ஆரம்பித்து விட்டோம் என்று சம்பந்தர் கூறப்போகிறாரா? என்பதுதான் புரியவில்லை.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்தவர் மகிந்த ராஜபக்ச. வன்னிப் பெருநிலப்பரப்பில் ஏகப்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் மூன்று இலட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வேலிக்குள் அடைப்பதற்கும் காரணமாக இருந்தவர் மகிந்த ராஜபக்ச.
கூடவே, தமிழ் மக்களின் இழப்பையும் உயிர்ப் பலிகளையும் சிங்கள மக்களின் வெற்றியாக கொண்டாடியவர் அவர்.
நிலைமை இதுவாக இருக்கையில், இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மன்றாட்டமாக சம்பந்தர் கேட்பது தமிழினத்தை இழிவுபடுத்துவதாகும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மகிந்த தரப்பும் உதவி செய்ய வேண்டுமென்றால், மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை சம்பந்தர் ஆதரித்தது எதற்காக என்ற கேள்வி எழும்.
சம்பந்தரின் மிக நீண்ட அரசியல் அனுபவத்தின்படி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் தான் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற கட்ட மைப்பில் முன்னெடுக்கப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் மகிந்த ராஜபக்ச உதவுவார் என்பதா? என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு மகிந்த ராஜபக்ச ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கெஞ்சுவதை விட,
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இரா. சம்பந்தர் தலைமையிலான அரசியல் கட்சி வலியுறுத்தியிருந்தால், இன்று தமிழர்களின் கோரிக்கை கனகச்சிதமாக நிறைவேறியிருக்கும்.
ஜெனிவாக் கூட்டத்தொடரின் போது மகிந்த ராஜபக்ச மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்காமல் தவிர்த்துவிட்டு இப்போது மகிந்த ராஜபக்சவிடம் கெஞ்சுவது இரா.சம்பந்தரின் இராஜதந்திரமற்ற செயலையே காட்டும்.
அந்த இராஜதந்திரம்தான் இல்லை என்றால், மகிந்த ராஜபக்சவை ஜெனிவாவில் வைத்து காப்பாற்றினீர்கள், இப்போது பார்த்தீர்களா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பார்த்தாவது இரா. சம்பந்தர் கேட்டிருக்க வேண்டும். இதைவிடுத்து மகிந்தவிடம் கெஞ்சுவது தமிழினத்துக்கு இழுக்கைத் தரக்கூடியது.
மின்சார நாற்காலியில் இருந்து மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றிவிட்டோம் என்று கூறியவர்கள் நல்லாட்சியினர். தமிழினத்தை அழிப்புக்குட்படுத்திய ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதை தன் முதல் வேலையாகச் செய்த அரசை நல்லாட்சி என்றுரைக்கும் எங்கள் அரசியல் தலைமையின் நோக்கமெல்லாம் சுயநலனும் பதவி மோகமும்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம்.