தாஜுதீன் கொலை – இராணுவ உயர் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைகளில், நேற்று சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலான் ரத்நாயக்க இந்த தகவலை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் இருவரும், இந்தக் கொலை நடந்த போது முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின், பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர்களாவர்.
இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாஜுதீன் கொலை நடந்த நாளன்று இரவு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து, எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
எனினும், விசாரணை செய்யப்பட்ட இராணுவ உயர் அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.