சுமந்திரனே இலக்கு வைக்கப்பட்டார் – நீதிமன்றத்துக்கு அதிகாரபூர்வ அறிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீது, கடந்த ஜனவரி 13ஆம் நாள் படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் நேற்றுமுன்தினம் அறிக்கை ஒன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கிளிநொச்சி நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேக நபர்கள், அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்ய முமயற்சித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.
எனினும் நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில், சுமந்திரனே இலக்கு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஐந்து முன்னாள் போராளிகள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.