சமஷ்டி தீர்வின் மூலமே நாட்டை இணைக்க முடியும்: விக்னேஸ்வரன்
சமஷ்டியை வழங்கினால் நாடு பிளவுபடும் என தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சமஷ்டி தீர்வின் மூலமே நாட்டை இணைக்க முடியுமென குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலுள்ளவர்கள் தெற்கிற்கும் தெற்கிலுள்ளவர்கள் வடக்கிற்கும் சுமூகமாக பயணித்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே சமஷ்டியை கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமஷ்டியை கோரும் வடக்கு முதல்வரை நாட்டை விட்டு விரட்டவேண்டும் என அண்மையில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
தன்னை விரட்டிவிட்டாலும் தமிழ் மக்களுக்காக பேச ஒருவர் வருவார் என்றும் அவரும் தாம் கூறுவதையே கூறுவார் என்றும் வடக்கு முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களுக்கு வடக்கிலுள்ளவர்கள் எதிரானவர்கள் என குற்றஞ்சுமத்தப்படும் நிலையில், சுமார் 80 வருடங்களுக்கு மேல் வடக்கில் உள்ள சிங்கள மக்கள் குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லையென்றும் வடக்கில் மக்களுக்கு காணிகள் தேவையாக இருக்கும்போது, தெற்கிலுள்ள சிங்கள மக்களை வடக்கிற்கு அழைத்து வந்து குடியேற்றுவதே எமக்குள்ள பிரச்சினை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.