Breaking News

ஜெனிவாவில் காலஅவகாசம் கோருவார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்



ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்று, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து உரையாற்றவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் வரும் பெப்ரவரி, 27ஆம் நாள் தொடங்கி, மார்ச் 24ஆம் நாள் விரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 28ஆம் நாள் உரையாற்றவுள்ளார்.

இதன் போது அவர் சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விபரிக்கவுள்ளார்.

அத்துடன், 29ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் காலஅவகாசத்தைக் கோருவார் என்றும், சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றுக்கு ஆதரவு கோருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிறிலங்கா தொடர்பான விவாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும், மார்ச் 22 ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கும் அறிக்கையை முன்வைத்து இந்த விவாதம் இடம்பெறும்.

பேரவையின் 29ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் விபரிப்பார்.

ஏற்கனவே அவர் சமர்ப்பித்த வாய்மொழி அறிக்கையில், ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகள், மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.