Breaking News

தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணிநேரங்களில் ஊடகவியலாளர்களுக்கு தடை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு சில மணித்தியாலங்களே கடந்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார தடை விதித்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை போக்குவரத்து சபையினர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா வர்த்தக சங்கத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு, மாவட்ட அரச அதிபர் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு ஆரம்பமாவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக செய்தி சேகரிக்க அனுமதித்த வவுனியா அரச அதிபர், கூட்டம் ஆரம்பமாகியதும் வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.

எனினும், அமைச்சர் ரிசாட் பதியுதீன், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் சென்ற அவர்களது பிரத்தியேக ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார். அத்தோடு, அக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் அங்கு நடந்தவற்றை வீடியோ மூலமும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்துள்ள நிலையில், பிராந்திய ஊடகவியலாளர்களை மட்டும் வெளியேற்றியமை எவ்வகையில் நியாயமானமென ஊடகவியலாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணித்தியாலங்களில் இடம்பெற்ற பிராந்திய ஊடகவியலாளருக்கு எதிரான ஊடக அடக்குமுறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.