Breaking News

கொட்டும் பனியிலும் இரவு பகலாகத் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு விமானப்
படைத்தளம் அமைந்துள்ள பகுதியின் இரண்டாம் வாசலில் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டமானது கொட்டும் பனியிலும் இன்றும் தொடர்கிறது.

நேற்றையதினம் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என அரச அதிகாரிகள் மக்களுக்குத் தெரிவித்துள்ளபோதிலும் அக்காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதன்காரணமாக நேற்று மாலை முதல் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்பு மக்கள் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

கரைத்துறைப்பற்று கேப்பாப்புலவு பிரதேசத்தில் 80 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் நேற்று விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து காணி உரிமையாளர்களும், கிராம அலுவலரும் அப்பிரதேசத்திற்குச் சென்றிருந்தபோதிலும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குரிய காணி உத்தியோகத்தர்கள் வருகை தரவில்லை.

இதன்பின்னர் காணி அளவீடு செய்வதற்காக வன வள அதிகாரிகள் அப்பிரதேசத்திற்கு வந்திருந்தபோதிலும், உயரதிகாரிகள் வருகை தராமையினால் மக்கள் வன வள அதிகாரிகளை காணி அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக மக்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியதோடு விசனத்தையும் தெரிவித்தனர். அத்தோடு தாம் தொடர்ந்தும் தமது நிலம் கிடைக்கும் வரை போராட்டத்திலீடுபடப் போவதாகவும் தெரிவித்த மக்கள், விமானப்படை முகாமுக்கு முன்பாக பந்தல் அமைத்து நேற்று இரவுமுதல் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.




















முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்