கேப்பாபிலவு மக்கள் ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தில்
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள் ஐந்தாவது நாளாகவும் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
விமானப்படையினர் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளை அளந்து கையளிப்பதற்காக காணி உரிமையாளர்களை கடந்த திங்கட்கிழமை குறித்த பகுதிக்கு வருமாறு கேப்பாபுலவு கிராம சேவை உத்தியோகத்தர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மக்கள் குறித்த பகுதியில் ஒன்றிணைந்தபோது அரசஅதிகாரிகள் எவரும் வருகை தராத நிலையில், காணி விடுவிப்பு தொடர்பில் தம்மை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாக தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டத்தில் வர்த்தகர்கள் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.