காணாமல் போனோர் உறவுகளின் போராட்டம் : நால்வரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள காலவரையறை அற்ற உணவுத் தவிப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 பேரில் நால்வரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை காணாமல் போனோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஏனைய காணாமல் போனோரின் உறவுகள், வவுனியா இளைஞர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்பிரகாரம் இன்றைய தினம் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து உணவுத் தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதி வரை இளைஞர்கள் பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
அத்துடன் வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் தமது சங்கத்தில் இருந்து நகரத்தின் ஊடாக போராட்டம் இடம்பெறும் பகுதி வரை பேரணியாக செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்றைய தினம் வவுனியாவிற்கு செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.