Breaking News

அம்பாந்தோட்டையில் சீனாவின் இராணுவத் தளமா? - அரசாங்கம் நிராகரிப்பு



அம்பாந்தோட்டையில் சீனா தனது கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள எதிர்பார்க்கக் கூடும் என்று வெளியாகும் தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று கருத்து வெளியிடுகையில்,

“அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா இராணுவத் தளத்தை அமைத்துக் கொள்ளப் போவதாக சில குழுக்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்த முனைகின்றன.

அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் எந்தவொரு வெளிநாடும், சிறிலங்காவில் இராணுவத் தளங்களை அமைக்க முடியாது.

துறைமுகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா கடற்படையே கையாளும்.

அம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியில் சீமெந்து தொழிற்சாலை, இயற்கை திரவ எரிவாயு நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்பன நிறுவப்படும்.

பாரிய இழப்புகளில் இருந்து சிறிலங்காவை மீட்பதற்காக, சீனாவும், சிறிலங்காவும் இணைந்து துறைமுகத்தை இயக்குவதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதுபற்றிய புரிந்துணர்வு உடன்பாடு ஏற்கனவே, சீன நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.

துறைமுக செயற்பாடுகள் தொடர்பாக வேறும் பல உடன்பாடுகள் விரைவில் கையெழுத்திடப்படும்.

15 ஆயிரம் ஏக்கரில் அம்பாந்தோட்டையில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்குவது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்தார்.