Breaking News

கோத்தாவுக்கு அஞ்சினார் மகிந்த – ராஜித



மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரவணைப்பிலேயே இருந்தது என்று, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தனது ஆட்சியை வீழ்த்துவதற்காக, பொது பலசேனாவை தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சம்பிக்க ரணவக்கவும், ராஜித சேனாரத்னவும் உருவாக்கியதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,

‘மகிந்தவின் இந்தக் கருத்து 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவை.

தனது அரசியல் நலனுக்காக மற்றவர் மீது சேறு பூசுவது மகிந்தவின் வழக்கம் தான். இது ஒன்றும் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

பொதுபலசேனாவின் உருவாக்கத்துக்குப் பின்னால் இருந்தவர் கோத்தாபய ராஜபக்ச தான்.

கோத்தாபயவின் கைப்பொம்மையாகவே பொது பலசேனா எப்போதும் இயங்கியது. அளுத்கமவில் பொது பலசேனா கூட்டம் நடத்துவதற்கு இடமளிக்குமாறு, அனுர சேனநாயக்கவுக்கு கோத்தாபயவே உத்தரவிட்டிருந்தார்.

அளுத்கமவை அவர்கள் தீக்கிரையாக்குவதற்கு அவரே காரணம்.

கோத்தாபயவின் செயற்பாடுகள், அரசாங்கத்தை அழித்து விடும் என்று மகிந்த ராஜபக்சவிடம் பலமுறை நான் கூறியிருக்கிறேன்.

அவர் அதனைத் தடுக்க முனையவில்லை. அவர் கோத்தாபயவுக்கு பயப்பட்டார். பாதுகாப்புச் செயலருக்கு சிறிலங்கா அதிபர் பயப்படுகின்ற அரசாங்கம் தான் அப்போது இருந்தது.

கோத்தாபய ராஜபக்ச வருகிறார் என்று உதவியாளர்கள் கூறியவுடன், நல்லிணக்கம், அமைதியைக் கட்டியெழுப்புர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதை மகிந்த நிறுத்தி விடுவார்.

கோத்தாபய இல்லாத போது தான், அமைதியைப் பற்றி அவரால் இரகசியமாக பேச முடிந்தது.

இந்த ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக மகிந்த கூறியிருக்கிறார். இதனைத் தான் அவர் 2015, 2016ஆம் ஆண்டுகளிலும் கூறினார். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

இந்த அரசாங்கம் ஆடலாம், ஆனால் விழுந்து விடாது” என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.