சம்பந்தனை எதிர்ப்பவன் நான் அல்ல - சி.வி
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை எதிர்கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தன்னிடம் கோரவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு விஜயத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கி செயற்படுமாறே இரா. சம்பந்தன் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த மாத முற்பகுதியில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக கூறிய வடமாகாண முதலமைச்சர்,
தான் இரா.சம்பந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒருவருடைய பெயரை குறிப்பிட்டு அவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்களுடன் இணங்கி செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு
சென்றதும் அவர்களை அழைத்து இணைந்து செயலாற்றுமாறு கோரியிருந்தேன்.
ஆனால் தனது அழைப்புக்கு அவர் பின்வாங்கினார் அதற்கு காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை.
தாம் நாடு திரும்பும்போதும் அவர்களை அழைத்து ஒற்றுமையாக செயற்படுங்கள் என வலியுறுத்தியிருந்தேன் என வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.