போர்க்குற்ற விசாரணையை காலங்கடத்தவே நல்லிணக்க ஆணைக்குழு
போர்க்குற்ற விசாரணை பொறிமுறையை ஏற்படுத்துவதை காலம் கடத்துவதற்காகவே, இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கு உத்தேசித்துள்ளதென சிவில் சமூக அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த போதும் போர்க்குற்ற விசாரணை பொறிமுறை குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள சிவில் சமூக அமைப்புகள், இதன்மூலம் போர்க்குற்ற விசாரணை பொறிமுறை நிறுவப்பட்டதன் பின்னரே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென்ற தமது கோரிக்கை, அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளன.
அத்தோடு, ஐ.நா தீர்மானத்திற்கமைவாக போர்க்குற்ற விசாரணையை விரைவாக அமுல்படுத்த வேண்டுமெனவும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்ற முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் சிவில் சமூக அமைப்புகள் தமது பரிந்துரைகளில் குறிப்பிட்டிருந்தன. எவ்வாறாயினும், அரசாங்கம் இதனை பரிசீலிக்க தயார் என்கின்ற போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கமே தீர்மானிக்குமென திட்டவட்டமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.