Breaking News

ஐந்து இந்திய மாநிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்பாடுகள் – இலங்கை திட்டம்



இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு நடைமுறையில் இருக்கும் நிலையில், எட்கா உடன்பாட்டையும் செய்து கொள்ளவுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் தனித்தனியாக உடன்பாடுகளையும் செய்து கொள்ளவுள்ளது.

டாவோசில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடும், இந்தியாவுடனான எட்கா உடன்பாடும் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் இறுதி செய்யப்படும்.

இந்த உடன்பாடுகளின் மூலம், 2.5 பில்லியன் மக்களைக் கொண்ட சந்தைக்குள் சிறிலங்கா நுழைய முடியும்.

இதைவிட, ஐந்து தென்னிந்திய மாநிலங்களுடனும் தனித்தனியான உடன்பாடுகளைச் செய்து கொள்ளும் திட்டமும் உள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா,கேரளா, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களுடன் தனித்தனியான உடன்பாடுகளைச் செய்து கொள்வதன் மூலம், 500 பில்லியன் டொலர் பிராந்திய பொருளாதாரத்துக்குள் சிறிலங்கா நுழைய முடியும்.

மேலும் பங்களாதேஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மியான்மார் போன்ற வங்காள விரிகுடா நாடுகளுடன், மேலும் உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜப்பான், பாகிஸ்தானுடனும் சுதந்திர வர்த்தக உடடன்பாட்டை செய்து கொள்வதற்கும் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.