வடக்கின் முன்னேற்றங்கள் மிகவும் மந்த கதியில் - சி.வி
வட மாகாணத்தின் முன்னேற்றங்கள் மிகவும் மந்த கதியில் இருப்பதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரிடம் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முதலமைச்சர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின் நிறைவில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,முன்னேற்றகரமாக நடைபெற்றிருக்கும் விடயங்கள் தொடர்பாக அவர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன்போது நான் குறிப்பிட்டது, வட மாகாணத்தின் தேவை மதிப்பீட்டை செய்வதற்கு மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்து, அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை, குறிப்பாக அதில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலகவங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் யு.என்.டீ.பி ஆகிய அமைப்புக்கள் பங்காற்றுகின்றன.
இதேபோல் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்கள், வடக்கில் முதலீடுகளை செய்யலாம், அதில் ஆட்சேபனை இல்லை என அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
அந்த விடயங்கள் முன்னேற்றகரமான விடயங்களாக உள்ளன. ஆனால் பெரும்பாலான மற்றைய விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் தாங்கள் நினைத்தால் செய்யும் விடயங்களாகவே இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டினேன்.
இதேபோல் அரசியல் ரீதியாக பேசும்போது எழுக தமிழ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவையா? என அவர் என்னிடம் கேட்டார்.
அவ்வாறில்லை இவை தமிழ் மக்கள் பேரவையும், எழுக தமிழும் தமிழ்தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவே என கூறியுள்ளதுடன், தமிழ்மக்கள் பேரவை, தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்ற உறுதிப்படுத்தலை அவர்களிடமிருந்து பெற்றதன் பின்னரே நான் தமிழ்மக்கள் பேரவையில் பங்கெடுத்தேன் என அவர் மேலும் கூறினார்.