Breaking News

குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருவர் விடுதலையா?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் இருப்பவர்கள் ஜெயகுமார், ராபட்பயாஸ். இவர்கள் இருவரும் கடந்த 1991-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், ராபட் பயாசும், ஜெயகுமாரும் தனித்தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘தமிழக அரசு குடியரசு தினத்தை முன்னிட்டு, 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சுமார் 180 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய உள்ளது. இதற்கான அரசாணையை பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த 180 பேரில் மனுதாரர்கள் இருவரும் உள்ளனரா? என்பது குறித்து விவரம் தெரியவில்லை. அதனால், இந்த வழக்குகளின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

இதையடுத்து, இந்த வழக்கை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.