40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சியின் பிடியில் இலங்கை
சிறிலங்கா 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சி ஒன்றை எதிர்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளதுடன் இந்த வரட்சியை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களையும் மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு சிறிலங்காவில் சராசரி மழையளவில் 70 வீதமே பெய்திருந்தது, இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது நீர்த்தேக்கங்களில் உள்ள நீர், இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்த முடியும்.
இதனால் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில், 36 வீத பங்களிப்பை வழங்கும் நீர்மின் உற்பத்தி கடுமையான சரிவைச் சந்திக்கவுள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது.
அரச பணியகங்களில் குளிரூட்டிகளை 26 பாகை செல்சியசுக்கு கீழ் குறைக்க வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் சுற்றுஅறிக்கை ஒன்றை அனுப்பவுள்ளார் என்று அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார். இதன் மூலம் மின்சாரத்தை ஓரளவு சேமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் மின்சார பயன்பாடு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளன. இந்த வரட்சியினால் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை நம்பியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
40 ஆண்டுகளில் இல்லாத இந்த மோசமான வரட்சியை எதிர்கொள்வதற்கான செயலணி ஒன்றை சிறிலங்கா அதிபர் உருவாக்கியுள்ளார். அதேவேளை வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உதவி மற்றும் நிவாரணப் பணிகளில் முப்படைகளையும் ஈடுபடுத்தவும், சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.