வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் கால எல்லை மேலும் இரண்டு மாதங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளினால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சரினால் விசாரணை குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. குறித்த விசாரணை குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மாகாணசபையின் 83 ஆவது அமர்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் குறித்த விசாரணை குழுவின் கால எல்லையை மேலும் 2 மாதங்கள் அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து விசாரணைக்குழுவின் கால எல்லை 2 மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விசாரணைக்குவிற்கு எதற்காக கால அவகாசம் வழங்கப்படுகின்றது என வட மாகாணசபையின் எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கால அவகாசத்தை கேட்டால் அதனை நாம் வழங்கப்படவேண்டும். இல்லையேல் கால அவகாசம் போதாமையினால் சில விடயங்களை ஆராயாமல் போய்விடும் என குறிப்பிட்டார்.