‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்விற்கு அணி திரளுமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள்!
உரிமையை மறுக்கும் இனவாதத்திற்கெதிராக ஒன்றுதிரண்டு உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு அணிதிரளுமாறு இப் புத்தாண்டு தினத்தில் அறைகூவல் விடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ.வசந்தராசா தெரிவித்தார்
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டமாக வடக்கில் இடம்பெற்ற ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணியை தொடர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கில் ‘எழுக தமிழ்’ பேரணி நடைபெறவுள்ளது. இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
‘உரிமைகளுக்காக சலுகைகளை மறுத்து கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக போராடி ஆயுதப் போராட்டம் மௌனித்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆயினும் ஜெனீவா தொடங்கி சர்வதேசம் வரை எமது உரிமைக்கான குரல் உரக்க ஒலித்தும் இலங்கை அரசு இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்பேசும் மக்களின் அபிலாஷைகளை அங்கீகரிக்கத் தயாரில்லாத இந்த நிலைப்பாட்டை முறியடிக்க ‘எழுக தமிழ்’ போராட்டம் தேவையாகவுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களே தமிழர் தாயகம் என்பதுடன் சுயநிர்ணயத்துடனான சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தை சீர்குலைக்கும் திட்டமிட்ட குடியேற்றங்களை உடன் நிறுத்தக் கோரியும் யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலை என்பவற்றுக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என உலகிற்கு வலியுறுத்தியும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் தமிழ் பேசும் மக்களுக்கெதிரான அரசியல், சமூக, பொருளாதார தொழில் வாய்ப்பு ரீதியான ஒடுக்குமுறைகளுக்கெதிரான கண்டனங்களை வெளிப்படுத்தியும் இந்த ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.
எனவே, தமிழ் பேசும் மக்களின் உரிமையை பிரகடனம் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் மௌனத்தைக் கலைத்து அனைவரும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு இந்த புத்தாண்டு முதல் தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்’ என அவர் தெரிவித்தார் .