Breaking News

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மயக்கம் – மைத்திரிக்கு விக்கி அவசர கடிதம்



வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் நேற்றுமாலை மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் நேற்று மூன்றாவது நாளாகவும், வவுனியா அஞ்சலகத்துக்கு முன்பாக, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களில் சிலரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக, நேற்றுக்காலை பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் நேற்றுமாலை மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஏனையோர் இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.