நயினாதீவில் புதிய புத்தர் சிலை – பலப்படுத்தப்படும் பௌத்த அடையாளங்கள்
நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக, நயினாதீவு நாகதீப புரான விகாரையில் புதிதாக புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருங்கல்லில் செதுக்கப்பட்ட இந்தப் புத்தர் சிலையை திறந்து வைத்தார்.
நாகபாம்பு மீது புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற லெப்.கொமாண்டர் ஜெயவர்த்தன இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை திறப்பு விழாவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நயினாதீவில் சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் 120 மில்லியன் ரூபா செலவில், 75 அடி உயரமுள்ள பாரிய புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டது.
இதனால் சர்ச்சைகள் எழுந்த நிலையில் உரிய அனுமதிகள் பெறப்படாததால், யாழ். மாவட்ட அரச அதிபர் இதன் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.