காணாமல் போனோரை தேட முடியாது! – மரண சான்றிதழ் வழங்கவும் முடியாது: ராஜித
காணாமல் போனோர் குறித்த ஒரே தீர்வு அவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாகுமென தெரிவித்துள்ள அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, காணாமல் போனோரை தேடுவது சிக்கலான விடயம் என்றும் அனைவரும் இறந்துவிட்டதாக மரண சான்றிதழ் வழங்கவும் முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, காணாமல் போனோர் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
”காணாமல் போனோரை தேடிப் பார்க்க வேண்டும். அதற்கான வித்தியாசமாக எதனையும் செய்ய முடியாது. காணாமல் போனோர் குறித்த பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் தேட முடியுமானவற்றை மாத்திரமே தேடலாம்.
காணாமல் போதல் என்பது கடந்த 1971ஆம் ஆண்டிலிருந்து பதிவாகியுள்ளன. அதன் பின்னர் 1988 ஆண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இக்கால கட்டங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் தொடர்பாக மரண சான்றிதழ் கோரப்படுகிறது. ஆனால் அவ்வாறு வழங்கமுடியாது. காரணம் இலங்கையில் அதற்கான நடைமுறை இல்லை. ஆகவே இதற்கு எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்” என்றார்.