Breaking News

கொந்தளிக்கும் மெரினா.....!!



சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று காலை அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல் நிலையத்துக்குள் தீ பரவியதால் உள்ளே இருந்த காவலர்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியேறினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்

சென்னையில் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேனியில் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது
மீண்டும் மெரினாவில் மக்கள் அமர்ந்தனர்


பல்வேறு திசைகளில் இருந்து மீண்டும் போராட்டகாரர்கள் மெரினாவில் திரண்டுவருகின்றனர்.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் மெரினா சாலை

மெரினா கடற்பகுதி அருகே போராட்டத்தை தொடரும் இளைஞர்களிடம், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மெரினாவுக்குள் மேலும் போராட்டக்காரர்கள் நுழையாத வண்ணம் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. தற்போது மெரினா சாலைகள் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடற்பகுதியில் அமர்ந்து போராட்டம் தொடர்பவர்களிடம் போலீசார் அமைதியாக கலைந்து செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.

ராயபுரம் - துறைமுகம் பாலத்தின் முன் பொதுமக்கள் சாலை மறியல்.



மெரினா கடற்கரையை நோக்கி வந்த இளைஞர்கள் ராயப்பேட்டையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

மெரினா கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் புகை குண்டு வீச்சு

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் திரண்டிருந்து இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டை வீசி கலைக்க முயன்று வருகின்றனர்.

கடற்கரையில் திரண்டுள்ள இளைஞர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு!

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் காவல்துறை கண்ணீர் புகை வீசி போராட்டம் செய்பவர்களை கலைத்து வருகின்றனர். 

தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், கடற்கரையில் திரண்டுள்ள இளைஞர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறையினர் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, இளைஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


மெரினாவில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.

கடல் வழியாக போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கிய மீனவர்கள்

மெரினாவில் போராட்டம் நடத்தி வருபவர்கள் கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் தண்ணீர், உணவு இல்லாமல் திண்டாடி வந்த நிலையில் கடல் வழியாக மீனவர்கள் போராட்டக்காரர்களுக்கு உணவு அளித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

போராட்டம் செய்தவர்களில் ஒரு சிலர் மயங்கி விழுந்ததால், மெரினாவுக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தடைந்துள்ளது.

மெரினாவில் இளைஞர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். காவல்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பயனில்லை. காவல்துறையினர் கவனமான முறையில் இளைஞர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர்.

நெல்லை, திருத்தணி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

மெரினாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற் பகுதி அருகே சென்று ஒன்றுகூடிவிட்டனர். காவல்துறை அருகில் வந்தால் கடலில் இறங்கி விடுவோம் என மிரட்டல்விடுத்து வருகின்றனர்

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அவர்களை அப்புறப்படுத்த போலீஸ் திணறி வருகின்றனர். அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

காவல்துறையினர் மெரினாவில் குழுமியிருக்கும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள் கடற்கரையை ஒட்டி குழுமியிருக்கின்றனர்.


அவர்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டிவருகின்றனர். அத்துடன் செய்தியாளர்களையும் அப்பகுதிக்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. 

இந்நிலையில், விரட்டப்பட்ட ஏராளமான இளைஞர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்குச் சென்று அவர்கள் திரண்டு வருகின்றனர்.
மெரினாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்தி வருபவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நெல்லை, திருத்தணி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் மெரினாவில் ஒன்றுதிரண்ட இளைஞர்கள் கலைய மறுத்து வருகின்றனர். கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினாவில் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் கடற் பகுதி அருகே ஒன்று திரண்டு வருகின்றனர். மனிதச் சங்கிலி அமைத்து நிற்கின்றனர். ஒரு சிலர் கடலுக்குள் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். மீடியாவையும் வெளியேற்ற காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டம், 7-வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், ' உங்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. எனவே மெரினாவை விட்டுக் கலைந்து செல்லுங்கள். எங்களிடம் லத்தி இல்லை, தவிர யாரும் உங்களை அடிக்கப்போவதில்லை'' என போலீஸார் ஒலிபெருக்கியில் கூறிவருகின்றனர். ஆனால் இளைஞர்களோ நிரந்தரச் சட்டம் வரும்வரை ஓயமாட்டோம் எனத் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்த ஒலிப்பெருக்கிகளை அகற்ற முற்பட்ட போது, அங்கே சலசலப்பு ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து, கூட்டத்துக்குள் நுழைந்த போலீஸார், அங்கிருந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து வெளியேற்றத் துவங்கியுள்ளனர். மேலும் பாரதி சாலை, பீட்டர்ஸ் சாலை, வாலாஜா சாலை அனைத்தும் போலீஸ் காவலில் இருப்பதுடன், மெரினா செல்லும் அனைத்து சாலைகளும் முழுதாக அடைக்கப்பட்டுள்ளது. தற்போது விவேகானந்தர் இல்லத்துக்கு முன்பாக இருந்த அனைவரையும் போலீஸார் கலைத்துவிட்ட நிலையில், அவர்கள் மறுபக்கம் இன்னொரு பெரிய கூட்டமாகச் சேர்ந்துவிட்டனர். அவர்களிடத்தில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், அவசர சட்டத்தைப் பற்றி விளக்கி வருகிறார். 



இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற மறுத்து, கடல் நோக்கி நகர்கின்றனர். அனைவரும் கைகோர்த்து நின்று மனித சங்கிலி அமைக்க முயற்சித்து வருகின்றனர்!



- ராஜா ராமமூர்த்தி, சிபி