யாழில் வாள்வெட்டுக் கலாசாரம் மேலோங்கியுள்ளது; டெனீஸ்வரன்
கலாசாரங்கள் பலவற்றை வழங்கி வந்த யாழ். மாவட்டம் தற்பொழுது வாள் வெட்டுக் கலாசாரத்தில் மேலோங்கி நிற்பதாக வடமாகாண சபையின் போக்குவரத்து மற்றும் மீன்பித்துத்துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எவரும் எதற்காகவும் தமது உயிர்களை தியாகம் செய்வதற்கோ, விதைப்பதற்கோ தற்போது தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக தமது இன்னுயிர்களை மாவீரர்களும் பொதுமக்களும் தியாகம் செய்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டுமானால், பல்வேறு விடயங்களில் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்படாமல் விட்டால் எத்தனையோ வருடங்களுக்கு தமிழினம் பின்னோக்கி தள்ளப்படும் என்றும் இதே பிரச்சினையை அடுத்த சந்ததியினருக்கும் விட்டுச் செல்லப் போகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராமங்கள் தோறும், மாவட்டங்கள் தோறும் பௌத்த பேரினவாதங்கள் தலைவிரித்து ஆடுவதாகவும், இவை பெரிதளவில் தோன்றும் என்றால் எதிர்காலத்தில் ஒரு அடியேனும் முன்னோக்கி வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.