மிக் ஊழலை அம்பலப்படுத்தியதால் உயிருக்கு ஆபத்து – குடும்பத்தினரிடம் கூறியிருந்தார் லசந்த
மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.
கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
மிக் கொள்வனவு ஊழலை அம்பலப்படுத்தியதால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று லசந்த விக்கிரமதுங்க அச்சம் கொண்டிருந்தார் என்று லசந்த குடும்பத்தினர் தம்மிடம் தெரிவித்தனர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு மீண்டும் மார்ச் 20ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர் படி, நான்கு மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில், முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக லசந்த விக்கிரமதுங்க அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்த கொள்வனவுகளில் பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச நேரடியாகத் தொடர்புபட்டிருந்தார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.