அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு 1235 ஏக்கர் காணிகளே ஒதுக்கீடு
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு 1235 ஏக்கர் காணிகள் மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக, வழிபாட்டு இடங்களோ, பாடசாலைகளோ அழிக்கப்படாது.
விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள், பாடசாலைகள் என்பன அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்காக அழிக்கப்படவுள்ளன என்று மகிந்த ராஜபக்ச வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்.
தலதா மாளிகை மற்றும் மல்வத்த ஆலயம் மீது கல்வீச்சு நடத்த மகிந்தவே குண்டர்களை அனுப்பினார். ஆனால் தற்போதைய அரசாங்கத்துக்கு எல்லா மதங்களையும் பாதுகாத்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் பொறுப்புடன் இருக்கிறது.
15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு விற்று விட்டதாக மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார். எந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கும் காணி உரிமை வழங்கப்படவில்லை.
எல்லா உடன்பாடுகளும் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் தான் செய்து கொள்ளப்படும்.
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் தொடர்பாக ஆறு தொடக்கம் ஏழு உடன்பாடுகள் செய்து கொள்ளப்படும். இவை எல்லாமே சீனர்களுடன் செய்து கொள்ளும் உடன்பாடுகள் அல்ல.
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் ஏனைய நாடுகளின் நிறுவனங்கள் கூட தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன” என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.