Breaking News

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை – என்கிறார் நீதியமைச்சர்

உள்நாட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை, விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை அமைக்க, நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு நாம் தயாராக இல்லை. இன்னமும் செயலணியின் அறிக்கையை நான் முழுமையாகப் படிக்கவில்லை.

ஆனால், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதில்லை என்ற தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணையில் இணைப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை.

அதைவிட அவ்வாறு வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து எமது நீதிபதிகளின் தரத்தைக் குறைத்து விட முடியாது.

உலகின் எந்த நாட்டு நீதிபதிகளையும் விட, எந்தவகையிலும் எமது நாட்டு நீதிபதிகள் குறைவானவர்கள் அல்ல.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு எமது பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை நோக்கி நாம் செல்லவும் மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.