ராஜபக்சவினர் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
ஐக்கிய தேசியக்கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கும் இடையிலான உடன்பாடு காரணமாவே சிறையில் இருக்க வேண்டிய ராஜபக்சவினர் வெளியில் சுதந்திரமாக நடமாடுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
லண்டனில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரும் திட்டத்தின் அடிப்படையிலேயே 2017 ஆம் ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் உடன்பாடுகள் உள்ளன.
மகிந்த ராஜபக்ச எப்படி ஆட்சிக்கு வர முடியும்? ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர வேண்டும்.
இதனையடுத்து பிரதமர் ஜனாதிபதி பதவியேற்பார். அதற்கு பிறகு பிரதமரை நியமிக்க வேண்டும். இதுதான் இந்த விளையாட்டா?. இதற்காகவா ராஜபக்சவினர் எவரும் கைது செய்யப்படாமல் உள்ளனர்?.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததற்காக வெட்கப்படுகிறேன். நானே என்னை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து நியாயத்தை நிறைவேற்றுமாறு கோரிய போதிலும் நியாயம் கிடைக்கவில்லை. இதனால், ஜெனிவா சென்று முறைப்பாடு செய்துள்ளேன்.
23 மாதங்கள் கடந்துள்ளது எங்கே நல்லிணக்கம்?. நல்லிணக்கம் இருந்தால், நாடு இந்த நிலைமைக்கு சென்றிருக்காது. மகிந்த ராஜபக்சவும் அரசாங்கத்தை கவிழ்க்கும் கதைகளை பேசியிருக்க மாட்டார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி நானே பேசினேன். எமது அரசாங்கம் பதவிக்கு வந்தது. சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. சட்டத்தை கையில் எடுக்க வேண்டியதில்லை பொலிஸார் கடமைகளை செய்வார்கள் என எதிர்பார்த்தோம்.
இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர பாடுபட்டமை குறித்து வெட்கப்படுகின்றேன்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் பற்றிய 476 முறைப்பாடுகள் எம்மிடம் இருந்தன.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 23 மாதங்களில் 223 முறைப்பாடுகள் உள்ளன.
இதுவரை எனது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு எந்த வேலைத்திட்டங்களும் இல்லை.
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பிரச்சாரங்களை மேற்கொண்ட என்னால் வீதியில் இறங்கி நடக்க முடியவில்லை.
நீங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்த அரசாங்கம் எமக்கே வேலையை காட்டுகிறது என மக்கள் என்னிடம் கூறுகின்றனர். என்னால், மக்களுக்கு பதில் கூறமுடியவில்லை.
இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இயங்கவில்லை என அரசாங்கம் மாத்திரமல்லாது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் யுத்த காலத்தில் எத்தனை சிங்களவர்கள் சிறையில் இருந்தனர்?. இங்கு தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லை. பணத்திற்காக வேலை செய்பவர்கள் இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு பெட்ரோல் கொடுத்து , குண்டு லொறிகளை எடுத்து வந்து கொடுத்து மாட்டிக்கொண்டவர்களை நாம் பார்த்துள்ளோம்.
வாகனங்களை வாடகைக்கு கொடுத்து சிக்கினர். அப்படியானால் இவற்றை செய்த சிங்களவர்கள் பயங்கரவாதிகளா எனவும் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.