தம் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் முன்னாள் போராளிகள்
அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐந்து பேரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.
சந்தேகநபர்களை நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது, அவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான, தில்லையம்பலம் அர்ச்சுனா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சந்தேகநபர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும், கைபற்றிய சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும், தாம் அக் குற்றங்களை புரியவில்லை எனவும், எமக்கு தெரிவித்திருந்த போதும், இது தொடர்பான விண்ணப்பங்கள் வழக்கு விளக்கத்திற்கு நியமிக்கப்படுகின்ற தினங்களிலேயே செய்துகொள்ள முடியும் என கூறினார்.
இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் B4717, B4917 ஆகிய சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பொருட்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.