Breaking News

தமிழர்களை கடத்திய கடற்படை புலனாய்வு பணிப்பாளர் விரைவில் கைது



கொழும்பில் இரண்டு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகே உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நிசாந்த சில்வா, நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வடிவேல் லோகநாதன் மற்றும் இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோரை, வான் ஒன்றுடன் கடத்திச் சென்று காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த வழக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரி நிசாந்த பீரிஸ் அறிக்கை சமர்ப்பிக்கையில்,

“2009ஆம் ஆண்டு நொவம்பர் 1ஆம் நாள் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட வடிவேல் லோகநாதன் மற்றும் இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகே, வெலிசறை கடற்படைத் தளத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரி லெப்.கொமாண்டர் சம்பத் தயானந்த ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டில் ஏற்கனவே, லெப்.கொமாண்டர் தம்மிக அனில் மாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பேரும் கடத்தப்பட்ட போது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வான், வெலிசறை கடற்படை முகாமில் 72 பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

எனினும், லெப்.கொமாண்டர் தம்மிக அனில் மாபா சார்பில் முன்னிலையான சட்டவாளர், இந்த வானில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்தே துண்டு துண்டாக வெட்டப்பட்டு சோதனையிடப்பட்டதாக, கூறினார்.

அதனை குற்றப் புலனாய்வு அதிகாரி நிராகரித்தார். அவ்வாறு சோதனையிடுவதற்கு கடற்படைக்கு அதிகாரமில்லை என்றும், காவல்துறையினர் மூலம் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவே அதனை செய்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, லெப்.கொமாண்டர் தம்மிக அனில் மாபாவை தொடர்ந்து தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.