Breaking News

உண்ணாவிரத போராட்டம், மக்கள் போராட்டமாக மாற வேண்டும் : டெனீஸ்வரன்



காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டமானது மக்கள் போராட்டமாக மாறுகின்ற பட்சத்தில்தான் ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், உண்மையில் பிள்ளைகளை தொலைத்தவர்கள் மற்றும் இராணுவத்திடம் பிள்ளைகளை நேரடியாக ஒப்படைத்தவர்கள் படுகின்ற வேதனை அளவிட முடியாதது என கூறியுள்ளார்.

கடந்த வருடமும் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயங்களை முன்வைத்த போதிலும் அதற்கு ஒரு சாதகமான அல்லது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவு கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

ஆனால் காணாமல் போனவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எம்மிடமே அரசாங்கம் கேட்பதாக குறிப்பிட்ட ப.டெனீஸ்வரன், அது தெரியாமல் தான் பிள்ளைகளை தொலைத்த பெற்றோர்கள் யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் பரிதவித்துவருவதாக கூறியுள்ளார்.

இந்தப் போராட்டமானது மக்கள் போராட்டமாக மாறுகின்ற பட்சத்தில்தான் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் எனவும் குறிப்பாக தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றே தாம் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்த இடத்திலும் ஒரு சாரார் ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்ற போது ஏனைய மக்கள் வேறு திசையில் செல்வதும் அல்லது அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாகவும் ப.டென்னிஸ்வரன் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் இந்த போராட்டத்தை முன்னெடுத்தால்தான், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் நேரடியாக இராணுவம், புலனாய்வு துறையினரிடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் மீளவருவது சாத்தியப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் அவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு எமது பிள்ளைகள் எங்கிருந்தாலும் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளதாகவும் ப.டெனீஸ்வரன் குறிப்பிட்டார்.