உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்க சுவாமிநாதனை அனுப்புகிறார் ரணில்
வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை, சிறிலங்காவின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அரசாங்கம் வெளிப்படுத்தக் கோரி, அவர்களின் குடும்பத்தினர் 14 பேர் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று வவுனியாவுக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைச் சந்திப்பார் என்று கூறினார்.
காணாமல்போனோர் தொடர்பான எந்தத் தகவலையும் சிறிலங்காவில் பெற முடியாதுள்ளதுடன் , அவர்கள் சட்டபூர்வமாக வெளிநாடு சென்றதாக தகவல்கள் எதுவும் இல்லை என்றும், இது குறித்து தெரிந்தஎல்லாத் தகவல்களையும் வழங்கத் தயார் என காவல்துறைமா அதிபர் அறிவித்துள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.