Breaking News

சென்னையில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்; வாகனங்கள் தீ வைப்பு

சென்னையில் மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை அமைதியான முறையில் போலீசார் இன்று காலை வெளியேற்றினர். ஆனால் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து கடல் பகுதியை நோக்கி சென்றனர். போராட்டம் அங்கு தொடர்கிறது. 

இதற்கிடையே மெரினாவை நோக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மெரினாவில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிறபகுதியில் இருந்து அங்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டது. இதற்கிடையே போராட்டக்காரர்களை கலைக்க கையெறி குண்டும் வீசப்பட்டது. 

போலீசார் வன்முறையை தடுக்க முயற்சி செய்தனர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

போலீசார் பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் போராட்டக்காரர்கள் அமைதியடையவில்லை. தொடர்ந்து இப்போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி ஜஸ்ஹவுஸ் பகுதியில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. காவல் நிலையத்திற்கு சிக்கிய காவலர்கள், காவல் நிலையத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். போலீசார் பதட்டத்துடன் வெளியேறும் காட்சிகள் அங்கிருந்து வெளியாகி உள்ளது. 

பெண் போலீசார் முகத்தில் கரும் புகையுடன் வெளியேறிய காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது.

காவல் நிலையம் முன்னதாக இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. காவல் துறையின் வாகனங்கள் எரிந்து உள்ளது. தொடர்ந்து அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் வெளியேற தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளியேற தவிர்க்கவும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

-தந்தி