ஜல்லிக்கட்டுக்கு தடை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்ணாவிரதம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பொங்கல் விடுமுறை ரத்து, விவசாயிகள் மரணம், ஜல்லிக்கட்டுக்கு தடை ஆகிய 3 பிரச்சினைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், நடிகர் சத்யராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீர பாண்டியன், தமிழ்நாடு இளைஞர்கள் பொது நல சங்கத்தின் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதத்திற்கு இடையே ஆர்.நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் விழா சங்க கால இலக்கியம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆகும். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததுடன், இன்று அது தொடர்பான வழக்கின் தீர்ப்பையும் தள்ளிவைத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. எனவே, மத்திய அரசு உடனே தலையிட்டு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழர்கள் பண்பாடு மீது நடத்தப்படும் தாக்குதல் இது. தமிழர்களின் பண்பாடு பற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கும், மத்திய அரசுக்கும் கவலை இல்லை. தமிழர்களின் பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்” என்றார்.
நடிகர் சத்யராஜ் நிருபர்களிடம் கூறும்போது, “ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. நீண்ட நெடிய காலமாக நடந்து வருகிறது. ஆனால், இப்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் என்பதே மனிதர்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது. எனவே, சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க வேண்டும்” என்றார்.